Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜி.எஸ்.டி., முறைகேட்டில் ஜான்சன் அண்ட் ஜான்சன்

டிசம்பர் 26, 2019 05:54

புதுடில்லி: ஜி.எஸ்.டி., வசூலில் முறைகேட்டில் ஈடுபட்ட 'ஜான்சன் அண்ட் ஜான்சன்' நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2017 ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. மறைமுக வரிகளை எல்லாம் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி.,யானது வரி விதிப்பு முறையில் புரட்சிகரமான முயற்சியாக கருதப்பட்டது. பல்வேறு அடுக்குகளில் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜி.எஸ்.டி., வரிவிகிதத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை நுகர்வோருக்கு கடத்தாமல், 'ஜான்சன் அண்ட் ஜான்சன்' நிறுவனம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த நவ.,15, 2017 முதல், அந்நிறுவனத்தின் சில தயாரிப்புகளுக்கான ஜி.எஸ்.டி., வரி, 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஜி.எஸ்.டி விகிதக்குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கடத்தாமல் மோசடி செய்ததை என்.ஏ.ஏ.,(National Anti-profiteering Authority) அமைப்பு கண்டுபிடித்தது. 

இதனையடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு, ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற குற்றச்சாட்டுக்காக நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு, இம்மாத துவக்கத்தில், ரூ.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்