Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்: முதல்வர், துணை முதல்வர் வேண்டுகோள்

டிசம்பர் 26, 2019 06:29

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களாட்சித் தத்துவத்தின் ஆணிவேராகவும், ஆரம்பப் புள்ளியாகவும் திகழும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க இருக்கும் வாக்காளப் பெருமக்கள்,
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி வரும் வளர்ச்சிப் பணிகளை எண்ணிப் பார்த்து தங்களது பொன்னான வாக்குகளை அ.தி.மு.க.வின் சார்பில்
போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ‘இரட்டை இலை’ சின்னத்திலும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு
அவரவர் சின்னங்களிலும் வழங்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது, 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு அளித்த வாக்காளர்கள்
ஜெயலலிதாவே இப்போது நேரில் வந்து வாக்கு கேட்பதாக எண்ணி, அவரின் நினைவுகளுக்கு புகழ் சேர்க்கும் வகையிலும், அவருக்கு அன்புடன் நன்றி கூறும்
முகத்தானும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி உங்கள் முன் நிற்கிறோம்.

மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, உள்ளாட்சி
நிர்வாகத்தில் ஈடுபடும்போது, மத்திய-மாநில அரசுகளின் முழுமையான ஒத்துழைப்பைப் பெறுவதோடு, மத்திய-மாநில அரசுகளோடு தோளோடு தோள் நின்று
புதிது புதிதாக திட்டங்களையும், நிதி ஆதாரத்தையும் பெற்று வந்து உங்கள் பகுதிகளின் வளர்ச்சியில் முழுமையாக அக்கறை காட்டுவார்கள் என்ற
உத்தரவாதத்தை வாக்காளர்களுக்கு நாங்கள் அளிக்கிறோம்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆகியோர் ஊரகப் பகுதிகளின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்கள். அ.தி.மு.க. அரசு அந்த இருபெரும் தலைவர்களின்
பாதையில் ஊரகப் பகுதிகளின் மேம்பாட்டில் மிகுந்த அக்கறைகொண்டு செயல்படுகிறது. அப்பணிகள் தொடர சிறப்பான வெற்றியை ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு அளிப்பீர்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு என அவர்கள் கூறியுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்