Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடந்த 40 ஆண்டுகளாக இதைத் தான் வலியுறுத்தி வருகிறேன்: ராமதாஸ்

டிசம்பர் 29, 2019 07:35

சென்னை, டிச.30: சுமையற்ற சுகமான கல்வி முறையைத்தான் கடந்த 40 ஆண்டுகளாகத் தான் வலியுறுத்தி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) ஆளுகைக்குள் இயங்கும் அனைத்து பள்ளிகளின் வளாகங்களும் கோபம் இல்லாத, மகிழ்ச்சி
நிறைந்த பகுதிகளாக மாற்றப்பட வேண்டும் என்று சிபிஎஸ்சி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நோக்கம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது
என்றாலும் கூட, கல்வி முறையை சுமையற்றதாக மாற்றாமல் இத்தகைய அலங்கார அணுகுமுறைகள் பயனளிக்காது.

பள்ளி நிர்வாகங்களுக்கு இது தொடர்பாக சி.பி.எஸ்.இ செயலாளர் அனுராக் திரிபாதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்; மாணவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது; பள்ளிகளில் செல்பேசிகளை பயன்படுத்தக்கூடாது. பொதுவாழ்வுக்கு வந்த பின்னர் கடந்த 40 ஆண்டுகளாக இதைத் தான் நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், பள்ளி வளாகங்களில் கோபம் ஏற்படுவதற்காக காரணிகளை அகற்றுவது தான் இதற்கு சிறந்த தீர்வாக இருக்குமே
தவிர, கோபத்தை கட்டுப்படுத்துவது முழுமையாக பயனளிக்காது. 

சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி
மக்கள் கட்சியின் கொள்கை. குழந்தைகளை முன்-மழலையர் பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குவதற்காக முதல் நாள் இரவு முதல்
பெற்றோர்கள் வரிசையில் நிற்கத் தொடங்குவதில் இருந்து தான் கல்விச் சீரழிவு தொடங்குகிறது. 

தாய்மொழியில் கல்வி வழங்குவதை தவிர்த்து விட்டு, ஆங்கில வழியில் கல்வி வழங்குவதை விட மோசமான தண்டனையை மாணவர்களுக்கு வழங்க முடியாது. அனிச்சையாக வரும் வார்த்தைகளையும், சிந்தனைகளையும் அடக்கிக் கொண்டு, தங்களுக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு மொழியில் பேச வேண்டும்; சிந்திக்க வேண்டும் என்பது எவ்வளவு கொடுமையானது? சென்னை போன்ற நகரங்களில் குழந்தைகள் அதிகாலையில் உறக்கம் கூட கலையாமல் எழுந்து, நீராடி, போக்குவரத்து நெரிசலில் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து பள்ளிகளுக்கு செல்வது என்பதே பெரும் மனித உரிமை மீறலாகும்.

உலகில் தரமான, சிறப்பான கல்வி பின்லாந்தில் தான் வழங்கப்படுகிறது. அந்நாட்டில் உள்ள பள்ளி வளாகங்கள் தான் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக திகழ்கின்றன. சுருக்கமாக கூற வேண்டுமானால், மலர்களாக கையாளப்பட வேண்டிய மாணவர்களை, மனிதர்களாகக் கூட கையாளாமல், மதிப்பெண் எந்திரங்களாக கையாளுவது தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற வேண்டும்.

அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்; கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும். அதன்மூலமாகத் தான் பள்ளிகளை கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்ற முடியும் என்பதை அரசுகள் உணர வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்