Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெருங்கும் பொங்கல் பண்டிகை: மண் பானை தயாரிக்கும் பணி தொய்வு

டிசம்பர் 29, 2019 07:46

தஞ்சாவூா்: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மார்கழி பனி மற்றும் விட்டு விட்டு பெய்யும் மழை காரணமாக மண்பானை தயாரிக்கும் பணி தொய்வு அடைந்துள்ளது.

டெல்டா மாவட்டத்தில் மார்கழி மாதத்திலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மண் பானைகள் தயாரிக்கும் தொழிலாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது நவநாகரீக உலகில் மண்பாண்டங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்து விட்டது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பு என கருதப்படுகிறது.

இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை மற்றும் மண்சட்டியின் தேவை அதிகமாக இருக்கும். பழைய வழக்கங்களை பின்பற்றும் மக்கள் மண்பானையில் மட்டுமே பொங்கல் வைத்து பண்டிகை கொண்டாடுவர். அதனால் இதனை கணக்கில் கொண்டு மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை மற்றும் மண்சட்டிகளை மார்கழி மாத தொடக்கத்திலேயே செய்வது வழக்கம்.

மண்பாண்ட பொருட்களை களி மண்ணில் செய்து வெயிலில் காயவைத்து பின்னர் நெருப்பில் வைத்து சூட்டு எடுப்பர். தற்போது மார்கழி மாதத்திலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்ததால் மண்பாண்டங்கள் தயாரிப்பதிலும்  அதனை காயவைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. மழை பெய்வதால் மண்பாண்டங்களை வீட்டிற்குள்ளேயே செய்து அங்கேயே உலர்த்தி வருகின்றனர். இதனால் மண்பாண்டங்கள் காய்வதற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.

மக்களிடம் மண்பாண்டங்களின் ஆர்வம் குறைந்துள்ள நிலையில்  மண் பாண்டங்கள் தயாரிப்பதில் இடையூறு ஏற்பட்டால் மக்கள் உலோக பாத்திரங்களில் பொங்கல் வைக்க முற்படுவர். இதனால் தங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே பொதுமக்கள் உடல்நலத்திற்கு ஏற்ற மண்பாண்டங்களை அதிகமாக தொடர்ந்து பயன்படுத்த முற்பட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்