Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக உள்ளாட்சி தேர்தலை தோல்வி பயத்தால் எதிர்க்கிறது: தம்பிதுரை

டிசம்பர் 30, 2019 06:08

கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிந்தகம்பள்ளி கிராமத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மக்களுக்கு பல்வேறு நலப்பணிகளை செய்த காரணத்தால் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கட்சி ஏகோபித்த வெற்றிபெறும். மேலும் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது.

இந்தியாவிலேயே சிறந்த மாநில அரசு என்ற பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் தி.மு.க. தான் நடத்தவிடாமல் தடை கோரியது. அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.

தற்போது மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளது. தற்பொழுது தேர்தல் நடந்து உள்ள நிலையில் வாக்கு எண்ணக்கூடாது என்று வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்குகளை தொடர்வது எந்த மாதிரியான நிலைப்பாடு என்று மக்கள் புரிந்துகொள்வார்கள். மக்கள் மீது நம்பிக்கை உள்ள அரசு அ.தி.மு.க. ஆனால் மக்களை நம்பாத கழகம், தி.மு.க.தான்.

தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை கண்டு அஞ்சுகிறது. மக்களை உள்ளாட்சி தேர்தலில் இருந்து திசை திருப்பவே அவர்கள் பல பிரச்சனைகளை எடுத்துக் கொள்கிறார்கள். தி.மு.க. தோல்வி பயத்தால் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்று முயற்சி செய்கின்றனர். தி.மு.க. கையில் ஆட்சி சென்றால் உள்ளாட்சி தேர்தல் என்பது நடக்காது என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்