Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்குச்சாவடியில் எஸ்ஐ மரணம்

ஜனவரி 02, 2020 12:32

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த எஸ் ஐ முருகேசன் உயிரிழந்துள்ள சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் வாக்குச்சாவடி மையத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த எஸ்ஐ ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்ற உத்தரவுக் காரணமாக இப்போது தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் பெரிய இடைவெளிக்கு பின் நடப்பதால், பல்வேறு தரப்பினரிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கத்தை விட வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் நிறைந்து வழிகிறது. இதனால் வாக்குச்சாவடி மையங்களில் பணி அமர்த்தப் பட்டிருக்கும் காவல் துறையினர் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

காவல் துறை அதிகாரிகளின் பணிச் சுமையை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியிலிருந்த எஸ்ஐ முருகதார் உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை டவுன் புதுகார்கானா பகுதியில் வசித்து வருபவர் முருகதாஸ். வயது 58. திருவண்ணாமலை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் எஸ்ஐயாக பணிபுரிந்தார்.

இந்நிலையில், இவர் தேர்தல் பணிக்காக துரிஞ்சாபுரம் ஒன்றியம் தொகுதிக்கு உட்பட்ட சண்முகா அரசுப் பள்ளியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். முருகதாஸ் நேற்று இரவு முதல் பணியிலிருந்துள்ளார்.

பணியிலிருந்தபோது முருகதாஸுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலி காரணமாக முருகதாஸ், அதே இடத்தில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ந்துபோன காவலர்கள் முருகதாஸை மீட்டு, 108 ஆம்புலன்ஸில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும், முருகதாஸ் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே உயிரிழந்துள்ளார். முருகதாஸ் உடலுக்குத் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தலைப்புச்செய்திகள்