Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு

மார்ச் 05, 2019 08:21

சென்னை: பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.  

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.ஜே.கே. கட்சிகளும் உள்ளன. அந்த கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. 

பின்னர் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. மதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எனவே, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், சென்னையில் இன்று திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 2 தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை முன்வந்தது. பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணியின்  வெற்றியை கருத்தில் கொண்டு, இந்த தொகுதிகளை பெற்றுக்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் தெரிவித்தது. அதன்படி கூட்டணி ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பாராளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். மார்க்சிஸ்ட் போட்டியிடும் 2 தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

அப்போது, 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், பாராளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் வந்தால் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பது என ஏற்கனவே முடிவு எடுத்திருப்பதாக கூறினார்.  

தற்போதுள்ள நிலவரப்படி திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பிறகு, திமுக போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

தலைப்புச்செய்திகள்