Monday, 8th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெருவில் நடக்கமுடியாது: கேரள ஆளுநருக்கு மிரட்டல் விடுத்த காங்கிரஸ் எம்.பி

ஜனவரி 03, 2020 01:56

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும் வடகரை எம்.பியுமான கே.முரளிதரன், ஆளுநர் ஆரிஃப் முகமது கானை மிரட்டும் விதத்தில் பேசியிருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தை கேரள சட்டமன்றம் சில தினங்களுக்கு முன் நிறைவேற்றியது. இது குறித்து பேசிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், கேரள சட்டமன்றம் நிறைவேற்றியிருக்கும் தீர்மானமானது, சட்டத்தின் அடிப்படையிலும், அரசியலமைப்பு அடிப்படையிலும் செல்லுபடியாகாத ஒன்று என்று கூறினார்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தசட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி கே.முரளிதரன், “இது இரண்டாவது சுதந்திர போராட்டம், குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு எதிரானது. இது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

இந்த சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதால் இச்சட்டத்திற்கு எதிராக கேரள சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. இது மதிப்பில்லாத தீர்மானம் என்று கேரள ஆளுநர் கூறியிருக்கிறார். மேற்கு வங்காளம் போன்று ஆளுநரை எச்சரிப்பது முதல்வரின் பொறுப்பு. ஆளுநர் பதவி விலகாவிட்டால் அவரால் தெருவில் நடக்க முடியாது என்று கே.முரளிதரன் எம்.பி பேசினார்.

முன்னதாக பேரணியை தொடங்கி வைத்த முதல்வர் உம்மன்சாண்டி கேரள சட்டமன்றத்தின் தீர்மானத்தை விமர்சித்த ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்