Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொருளாதார மந்த நிலை, 75 சதவீத கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் மூடல்: பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

ஜனவரி 05, 2020 05:35

கோவை: பொருளாதார மந்த நிலை காரணமாக கோவையில் 75 சதவீத கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகள் அதிகம் இருந்த காரணத்தால், தென்னிந்தியவில் மான்செஸ்டர் என்ற சிறப்பு பெற்றது. பஞ்சாலைகளுக்கான இயந்திரங்கள் தயாரிக்கும் ஆலை, விசைத்தறி தொழிற்கூடங்கள், பம்புசெட், ஆட்டோெமாபைல் உதிரிபாகம், லேத் ஒர்க்‌ஷாப், பவுண்டரி, வெட்கிரைண்டர் உற்பத்தி என 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோவையில் இயங்குகின்றன. இதில், கிரைண்டர் மற்றும் கிரைண்டருக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. கணபதி, ஆவாரம்பாளையம், பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.

இத்தொழிலை நம்பி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கிரைண்டர் தயாரிப்பில் இந்தியாவில் 60 சதவீத பங்கு கோவை பெற்றுள்ளது. இங்கு, தயாரிக்கப்படும் வெட் கிரைண்டர்கள் உள்நாட்டு தேவை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, 2017ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவை இத்தொழிலை புரட்டிப்போட்டு விட்டது. ஏற்கனவே, மின்வெட்டு, மூலப்பொருள் விலை உயர்வு, ஸ்கில்டு லேபர் தட்டுப்பாடு, வங்கிக்கடன் மறுப்பு என பல்வேறு பிரச்னைகளால் கடந்த 2001ம் ஆண்டு முதல் கிரைண்டர் உற்பத்தி தொழில் தள்ளாட்டம் கண்டுவந்தது. இந்நிலையில், மத்திய அரசின் மேற்கண்ட நடவடிக்கை இத்தொழிலை ஒட்டுமொத்தமாக தலைகீழாக கவிழ்த்து விட்டது. ஆரம்பத்தில், கிரைண்டர் உற்பத்திக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

தொழில் கடும் நசிவு மற்றும் பலத்த எதிர்ப்பு காரணமாக இது 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனாலும், தொழில் மேம்படவில்லை. இதையடுத்து, தற்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. ஆனாலும், நிலைமை சீராகவில்லை. முன்பு, வீட்டு உபயோக கிரைண்டர் சுமார் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். தற்போது, தொழில் நெருக்கடி காரணமாக 2 ஆயிரம் ரூபாய்க்குகூட விற்பனையாவது இல்லை. இதனால், கிரைண்டர் உற்பத்தியாளர்கள், ஆலையை தொடர்ந்து நடத்த முடியாமல் திக்குமுக்காடுகின்றனர். தமிழக அரசின் இலவச கிரைண்டர் திட்டத்துக்கு, மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் கிரைண்டர் ஆர்டர் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த ஆர்டரும் நின்றுவிட்டது. கோவை வட்டாரத்தில், நாள் ஒன்றுக்கு சர்வ சாதாரணமாக ரூ.150 கோடி அளவுக்கு கிரைண்டர் உற்பத்தி இருந்தது. இது தற்போது ரூ.20-30 கோடி அளவுக்கு சுருங்கி விட்டது.

கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் கூறியதாவது: எந்த தொழிலும் தெரியாத நிலையில் இருந்த எங்களுக்கு இங்குள்ளவர்கள் வேலைக்கான பயிற்சி அளித்து உணவு, ஊதியம் என கைநிறைய சம்பளம் அளித்தனர். இரவு பகல், ஓவர்டைம் என இடைவிடாமல் பணிபுரிந்து வாரம் 4 ஆயிரம் ரூபாய் என சம்பாதித்து இங்குள்ள செலவு போக எங்கள் ஊரில் உள்ள தாய், மனைவிக்கு பணம் அனுப்பினோம். ஆனால், தற்போது தொழில் நெருக்கடி காரணமாக வாரம் 2 ஆயிரம் ரூபாய் கிடைப்பதே அரிதாகி விட்டது. இப்ப ஆர்டரே இல்ல. எப்படி வேலைக்கு வெச்சுக்கிறதுன்னு முதலாளி சொல்றார். ஊருலயும் வேலை இல்லைன்னு இங்கு வந்தோம், இப்போ, இங்கேயும் வேலை இல்லேன்னா எங்கே போறது என தெரியல. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த  சில ஆண்டுகளாக நாட்டின் உற்பத்தி துறையில் மிகப்பெரிய மந்தமான சூழல்  நிலவுகிறது. வேலையின்மை அதிகரிப்பால், நிரந்தர தொழிலில் உள்ளவர்கள்  வெளியேற்றம், ஐடி துறையில் வேலையிழப்பு என தொடர் நெருக்கடியை தொழில்துறை  சந்தித்து வருகிறது. இதன் காரணமாக வாங்கும் சக்தி இழந்து, உற்பத்தி  செய்யப்பட்ட பொருட்கள் அளவுக்கு அதிகமாக தேங்கிக்கிடக்கிறது. சிறு, குறு  தொழில்களை விழுங்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கபளீகரம் ஒரு புறம்  என்றால், மத்திய அரசின் சலுகை மறுப்பு இன்னொருபுறம் கவலை தருவதாக  தொழில்முனைவோர் கூறுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்