Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் திறக்கப்படுமா மூடிக்கிடக்கும் தச்சுக்கொல்லு உற்பத்தி கூடம்

ஜனவரி 07, 2020 09:51

புதுக்கோட்டை: அறந்தாங்கி- பேராவூரணி சாலையில் ஊராட்சி ஒன்றியத்துக்கு நிரந்தர வருவாயை அளித்து வந்த தச்சுக்கொல்லு உற்பத்தி தொழில்கூடத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தச்சு கொல்லுத் தொழிலாளா்கள் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தச்சுக் கொல்லு உற்பத்தி தொழில்கூடத்தைத் தொடங்க மறைந்த முன்னாள் முதல்வா்  கருணாநிதி உத்தரவிட்டாா்.
அவரின் உத்தரவின் பேரில் கடந்த 1971-ம் ஆண்டில் அப்போதைய ஒன்றியக்குழு தலைவர் ராசன் முயற்சியால்  அறந்தாங்கி- பேராவூரணி சாலையில் தச்சுக்கொல்லு உற்பத்தி தொழில்கூடம் தொடங்கப்பட்டது.

அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களுக்கு மரம் மற்றும் உலோகத்தால் ஆன பீரோ  அமரும் இருக்கைகள்  நாற்காலிகள் மரஅலமாரி உள்ளிட்ட தளவாட சாமான்கள் இந்த தொழில்கூடத்திலிருந்து தயாரித்து வழங்கப்பட்டன. இதனால் அரசு அலுவலங்களுக்கு தரமான பொருள்கள் சலுகை விலையில் கிடைத்தன. இதன் காரணமாக ஊராட்சி ஒன்றியத்துக்கும் அதிக அளவு வருமானம் கிடைத்தது.

லாபத்தில் இயங்கி வந்த இந்த நிலையங்களில் பணியாற்றிய ஊழியா்கள் ஓய்வு பெற்ற பிறகு  அந்த இடங்களுக்கு பணியாளா்களை நியமனம் செய்யாத காரணத்தால் அறந்தாங்கி உள்பட பல்வேறு ஊா்களில் இயங்கி வந்த தச்சுக்கொல்லு நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. இதனால் கட்டடங்கள் பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தரமான பொருள்களை என்றுமே வாடிக்கையாளா்கள் தேடி வந்து வாங்கிச்செல்வா். தற்போது இத்துறையில் பல நவீனமுறையில் மரப்பொருள்கள் பிளைவுட் கடைகளில் மிக அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் அவை தரமின்றி இருக்கின்றன. அரசு சாா்பில் மரம் மற்றும் பிளைவுட் உள்ளிட்ட பா்னிச்சா் பொருள்களை உற்பத்தி செய்தால்  ஊராட்சி ஒன்றியத்துக்கும் அதிக வருமானம் கிடைக்கும். அரசு மற்றும் நிறுவனங்களுக்கும் தரமான பொருள்கள் கிடைக்கும் .

எனவே பயிற்சி பெற்ற பணியாளா்களை வேலைக்கு அமா்த்தி  மூடப்பட்டு பயனின்றி கிடக்கும் தச்சுக் கொல்லு உற்பத்தி தொழில்கூடத்தை மீண்டும் திறக்க வேண்டும் என இப் பகுதி பொதுமக்கள்  அரசு ஊழியா்கள் விரும்புகின்றனா்.

தலைப்புச்செய்திகள்