Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொகுதி பங்கீடு முடிவடைந்தது 20 மக்களவைத் தொகுதிகளில் திமுக போட்டி

மார்ச் 05, 2019 09:04

சென்னை: பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்ததையடுத்து, 20 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.  

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது.  

இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில், வைகோ தலைமையிலான நிர்வாகிகள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் தருவதற்கு திமுக தலைமை முன்வந்தது. இதனை மதிமுக ஏற்றுக்கொண்டதையடுத்து, ஒப்பந்தம் கையெழுத்தானது.  

இத்தகவலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதி செய்தார். மேலும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மதிமுக போட்டியிடும் தொகுதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார்.  

இதன்மூலம் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. மனித நேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை.  

தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டதாகவும், மீதமுள்ள 20 தொகுதிகளிலும் திமுக போட்டியிடும் எனவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  

இதையடுத்து, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும். 

தலைப்புச்செய்திகள்