Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈரான்- அமெரிக்கா போர் பதற்றம்: இந்தியாவிற்கு வரும் ஆபத்துகள்?

ஜனவரி 08, 2020 09:55

புதுடெல்லி: ஈரான்- அமெரிக்க போர் பதற்றத்தால் உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளன. ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசிம் சுலைமானி. இவர்தான் அமெரிக்காவின் பரம எதிரி. இவரைக் கொன்ற பிறகுதான் உலக நாடுகளில் ஒருவித பதட்டம் தொற்றி கொள்ள ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இது கலவரம் கலந்த பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

தன் வளங்களை பாதுகாத்து கொள்ள ஈரான் படாத பாடு பட்டு வந்தாலும், அதற்கு அமெரிக்கா அணு அளவுகூட அசைந்து கொடுக்காமல் உள்ளது என்பதுதான் கடந்த கால, நிகழ்கால சரித்திர உண்மை. அமெரிக்காவை “எண்ணெய்த் திருடன்” என்று கூறுவார்கள். எண்ணெய் வளம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அமெரிக்கா நுழைந்திருப்பதை காணமுடியும்.  அதிக அளவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகள் கொண்ட பட்டியலில், ஈரான் எப்போதும் டாப்பில் உள்ளது. தொடர்ந்து முதல் 3 இடங்களுக்கு உள்ளாகவே அந்நாடு இருந்து வருகிறது.

அமெரிக்கா தனது முழு ஆதிக்கத்தை செலுத்தி எண்ணெய் டேங்கர்களும், ட்ரோன்களும் தாக்கப்பட்டன. எவ்வளவு தாங்க முடியுமோ அவ்வளவு அழுத்தத்தை அமெரிக்கா கொடுத்தும் ஈரானை ஒன்றும் அசைக்கவே முடியவில்லை. அது மட்டுமல்ல. சிரியாவில் இருந்து பஷீர் அல் அசாத்தையும் எதுவுமே செய்ய முடியவில்லை. ஈரான், ஈராக் போன்ற நாடுகளின் செல்வாக்கும் அதிகரித்தே வந்தது. இதுதான் அமெரிக்காவின் ஆத்திரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால்தான் ஈரானுக்கு குட்டு வைக்கவும், அதை தனது கட்டுப்பாட்டில் வைக்கும் முயற்சியிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரான் மீதான பொருளாதார தடைகள் மட்டுமல்லாமல், மற்ற பொருளாதார தடைகளும்கூட மெல்ல மெல்ல அகற்றப்படும் என்ற சவுதி அரேபியாவின் விருப்பம்தான் தனது விருப்பமும் என்பதை சொல்லாமல் சொல்ல நினைக்கிறது அமெரிக்கா.

நேரடியாக ஈரானை தாக்குவதையும் அமெரிக்கா தவிர்த்தாலும், வளைகுடாவில் இருக்கும் ஈராக் முதல் ஓமன் வரை பல்லாயிரக்கணக்கான வீரர்களை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. சமாதானம் ஒருவேளை அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நேரடி போர் வந்தால், தங்களுக்கும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படும் என்று துபாய் முதல் ஐக்கிய அரபு அமீரகம் வரை நடுங்குகின்றன. 

இதியாவை பொறுத்தவரையில் வளைகுடாவில் மட்டும் 80 லட்சம் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். 80 சதவீத எண்ணெயை உள்நாட்டு தேவைக்காக இந்தியா இறக்குமதி செய்து கொள்கிறது. அங்கிருந்து எரிவாயுவையும் வாங்கி கொள்கிறது. அதனால் எப்படியும் இந்த வளைகுடா நாடுகளுடன் 100 பில்லியனுக்கும் மேல் வர்த்தகம் சர்வ சாதாரணமாக இந்தியா நடத்துகிறது. இதெல்லாம் இனி சிதைந்து போக வாய்ப்புள்ளது.

பண வரவு மேலும் அந்த இந்தியர்கள் மூலம் வருஷந்தோறும் சுமார் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறது.. ஒருவேளை இந்த போர் வந்துவிட்டால், அவ்வளவும் பாதிக்கப்படும். குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து வரும் இரண்டரை லட்சம் கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பண வரவும் சேர்ந்தே பாதிக்கப்படும்.

அடுத்த பிரச்சனை கச்சா எண்ணெய்.. இப்பவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வர ஆரம்பித்துவிட்டது.. நம் நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றம் வந்துவிட்டது.. அப்படியென்றால் அந்நிய செலாவணியிலும் தாக்கம் துவங்கிவிடும் என்றே அஞ்சப்படுகிறது. அப்படி அந்நிய செலாவணி பற்றாக்குறை அதிகரித்துவிட்டால், ஆட்டோமேட்டிக்காக உணவு, குளிர்பானம், போக்குவரத்து, ரயில்வே, போன்றவைகளிலும் கடுமையான பாதிப்பு வரும். இந்த பாதிப்பு வேலையின்மையில் கொண்டு போய் நிறுத்தும்..

ஈரான் மீது தாக்குதல் நடந்து.. அதன்மூலம் 3-வது முறையாக எண்ணெய் விலை உயர்ந்துவிட்டால், இந்தியாவின் பொருளாதாரம் மேலும் நலிவடையும். பணவீக்கம் இப்பவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரை எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்த பெட்ரோல், டீசல் விலை அதிகாரித்தால் சாமான்ய மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கவே செய்யும் என்பது இயல்பு.. பொருட்கள் விலை உயர்ந்தால், நாட்டின் பணவீக்கமும் மேலும் உயரும் என்பது யதார்த்தம்.

ஒருவேளை பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு வரியை குறைத்தால், இந்தியாவின் வருமானத்தை அது மேலும் குறைத்து நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தும். இன்னொரு பக்கம் தங்கம் விலையும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. எவ்வளவுதான் பணம் கொட்டினாலும் சரி.. அங்கீகாரம் கிடைத்தாலும் சரி.. பொருளாதார அடி என்பதையும் தாண்டி வளைகுடா நாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்