Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிடத் தயாரான ஹேங்மேன்

ஜனவரி 08, 2020 10:46

புதுடெல்லி: நிர்பயா கூட்டுப் பாலியல் பலாத்காரம், மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், மீரட் சிறையில் தூக்கிடும் நபராக (ஹேங்மேன்) உள்ள பவண் ஜல்லத், 4 பேரையும் தூக்கிடத் தயாராக இருப்பதாக தில்லி திகார் சிறையிடம் தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக பவண் கூறுகையில்,

4 தலைமுறைகளாக எங்கள் குடும்பம் இந்த வேலையை (ஹேங்மேன்) செய்து வருகிறது. நான் மீரட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சைக்கிள் மூலம் போர்வை விற்கும் தொழில் செய்து வருகிறேன். ஆனால் சிறையில் தூக்கிடும் நபராக (ஹேங்மேன்) உள்ளது யாருக்கும் தெரியாது. 

எனது மூதாதையர் லட்சுமன் சிங், லாகூர் சிறையில் ஷஹீத் பகத் சிங், ராஜ் குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரை தூக்கிலிட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நிதரி வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட சுரேந்தர் கோலி என்பவரை தூக்கிடும் பணிக்கு அனுமதிக்கப்பட்டேன். ஆனால், அவரது மரண தண்டனையை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றியமைத்தது. எனவே நான் தற்போது தான் முதன்முறையாக குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளேன். 

ஒருவரை தூக்கிடும் முன்பாக அந்த கயிற்றின் பலம், தூக்கிடும் இடம், இழுக்கப் பயன்படும் கருவி, தூக்கிடும் நபருக்கு சமமான எடை கொண்ட மணல் மூட்டை என அதற்கான தயார் நிலைக்கு மட்டும் 3 மணிநேரம் செலவாகும். இதில் எனக்கு எந்த மன அழுத்தமும் கிடையாது என்று தெரிவித்தார். 

முன்னதாக, திகார் சிறையில் உள்ள 4 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற மீரட்டில் உள்ள தூக்கிடும் நபரை (ஹேங்மேன்) திகார் சிறை நிர்வாகம் தொடா்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்