Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட 24 மொழிகளில் கீழடி ஆய்வறிக்கை

ஜனவரி 10, 2020 07:44

சென்னை: கீழடி ஆய்வறிக்கையை தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 24 மொழிகளில் புத்தகமாகத் தமிழகத் தொல்லியல் துறை வெளியிட்டிருக்கிறது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். வரும் 21-ம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் இரண்டு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வார நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறுகிறது.

சுமார் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், மாணவ, மாணவியர் மற்றும் மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்பவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறும்படம் திரையிடல், திறனாய்வுப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கின்றன.

கண்காட்சி அரங்குக்கு வெளியே `கீழடி - ஈரடி தமிழ் தொன்மங்கள்' என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் கண்காட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். கீழடி அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சுடுமண் குழாய், நீர் மேலாண்மைத் திட்டம், கறுப்பு சிவப்பு குவளைகள் உள்ளிட்டவைகளின் மாதிரியும் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கீழடி அகழாய்வுப் பணிகள் குறித்து விளக்கும் ஒளிப்பட காட்சிக் கூடமும் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளில் புத்தகமாகவும் தமிழகத் தொல்லியல்துறை வெளியிட்டிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகள் ரூ.50 என்ற விலையிலும் மற்ற மொழிப் பதிப்புகள் ரூ.200 என்ற விலையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``புத்தகங்களே நம்மை ஏமாற்றாத சிறந்த நண்பன். புத்தகங்கள் இல்லையெனில், மனிதகுலம் இத்தகைய வளர்ச்சியைக் கண்டிருக்க முடியாது. இந்தப் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற அரசின் நிதி தேவை என்று வலியுறுத்தப்பட்டது.

அடுத்த ஆண்டிலிருந்து புத்தகக் கண்காட்சிக்கு அரசு சார்பாக ரூ.75 லட்சம் வழங்கப்படும்'' என்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவர்      பா.வளர்மதி உள்ளிட்டோரும், தொல்லியல் துறையின் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்