Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக பயங்கரவாதிகளின் நண்பர்கள் மேலும் 6 பேர் சிக்கினர்

ஜனவரி 11, 2020 01:13

நாகர்கோவில்: குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந்தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார். வில்சன் கொலை செய்யப்பட்ட நேரத்தில் சோதனை சாவடி அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அவரை 2 பேர் கொலை செய்தது தெரிய வந்தது. அவர்கள் கேரளாவுக்கு தப்பிச் செல்வதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து கொலையாளிகளின் உருவப்படங்களை சேகரித்த குமரி மாவட்ட போலீசார், அதனை கேரள போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அந்த படங்களை பார்த்த கேரள போலீசார், அவர்கள் பயங்கரவாதிகள் என தெரிவித்தனர். அந்த பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபீக் என தெரிவித்த கேரள போலீசார், அவர்களின் உருவப்படங்களையும் வெளியிட்டனர். அந்த படங்களில் காணப்பட்ட அப்துல் சமீமும், தவுபீக்கும் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு மற்றும் நாகர்கோவில் இளங்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் குமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் எம்.ஆர். காந்தி தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள். இதுபோல திருவள்ளூர் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கிலும் கைதானவர். இவர்கள் ஜாமீனில் வந்து தலைமறைவாகிய பயங்கரவாதிகள். எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகளையும் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள், அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகள் என போஸ்டர் அச்சடித்து விமான நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் ஒட்டி தேடி வந்தனர்.

தமிழக போலீசார் மட்டுமின்றி கேரள போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இவர்களை பற்றி தகவல் கொடுப்போருக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளது. கேரள அரசு ரூ.5 லட்சம் பரிசு தருவதாக கூறி உள்ளது.

போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நேற்று காலை பாலக்காடு பகுதியில் 2 பேர் சிக்கினர். 2 பேருமே கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அங்குள்ள மருத்துவக் கல்லூரி அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இன்னொருவர் வெல்டிங் தொழிலாளி. இவர்கள் இருவரும் அப்துல் சமீம், தவுபீக்குடன் அடிக்கடி போனில் பேசி வந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3-வது நபர் களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் உள்ள பூத்துறையில் பிடிபட்டார். இவர், நெல்லையைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அங்குள்ள பல்வேறு மத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டவர். இப்போது எஸ்.ஐ. வில்சன் கொலையிலும் இவருக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் போலீசார் இவரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள். கேரளாவில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் குமரி மாவட்டத்திலும் கியூ பிரிவு போலீசார் கொலையாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

முதல் கட்டமாக வில்சனை கொலை செய்ததாக கூறப்படும் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோருடன் மேலும் 2 பேர் இருந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் நாகர்கோவிலில் இருந்து ஒரு காரில் களியக்காவிளை வந்துள்ளனர். சோதனை சாவடிக்கு முன்பே காரில் இருந்து தவுபீக்கும், அப்துல் சமீமும் இறங்கி கொண்டனர்.

அவர்களை இறக்கி விட்ட கார், சோதனை சாவடியில் இருந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் உள்ள இஞ்சிவிளையில் நின்றது. இதற்கிடையே காரில் இருந்து இறங்கிய அப்துல் சமீமும், தவுபீக்கும் ஒரு ஆட்டோவில் ஏறி சோதனை சாவடிக்கு சென்றுள்ளனர். அங்கு வில்சனை கொலை செய்து விட்டு கார் நிறுத்தப்பட்ட இஞ்சிவிளை நோக்கி சாவகாசமாக நடந்து சென்றுள்ளனர். இவர்கள் சென்றதும், கார், அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கொலை நடந்த சில நிமிடங்களில் ஒரு கார், கேரளா நோக்கி அதிவேகத்தில் சென்றது, கேரள நெடுஞ்சாலைகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளது. அந்த கார், இஞ்சி விளையில் நின்ற கார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து வில்சனை கொன்ற பயங்கரவாதிகள் இருவருடன் மேலும் 2 பேர் இருந்ததை உறுதி செய்த போலீசார் அவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு ஆகியோர் களியக்காவிளையில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் நடத்திய விசாரணையில் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என சந்தேகப்படும் 6 பேர் பற்றிய விவரங்கள் தெரிய வந்தது.

அந்த 6 பேரையும் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்பேரில், பயங்கரவாதிகள் இருவரும் விரைவில் சிக்குவார்கள் என்று தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தெரிவித்தார். இதற்கிடையே களியக்காவிளையை அடுத்த கேரள எல்லையான பாறசாலையில் உள்ள புன்னகாட்டுவிளை பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் வீட்டில் கியூ பிரிவு போலீசார் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.

தீவிரவாத தொடர்பு குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வில்சன் கொலை நடந்த நாள் முதல் அவர், தலைமறைவாகி விட்டார். இத்தகவல் அறிந்த போலீசார் கம்ப்யூட்டர் என்ஜினீயரையும் தேடி வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்