Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டில்லியில் எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை

ஜனவரி 13, 2020 03:44

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், டில்லியில் இன்று(ஜன.,13) ஆலோசனை நடத்தவுள்ளன.

மத்திய அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக இது கருதப்பட்டாலும், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர், இந்த கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக வசித்து, துன்புறுத்தலுக்கு ஆளாகி, அகதிகளாக வந்த, ஹிந்து, சீக்கியர், கிறிஸ்துவர் உள்ளிட்ட அந்நாட்டு சிறுபான்மையினருக்கு, இந்திய குடியுரிமை அளிப்பதற்கான திருத்த சட்டம், சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், டில்லியில் இன்று கூட உள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்தியில் உள்ள, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் முயற்சியாகவும், இந்த கூட்டம் நடக்கவுள்ளது.

விரைவில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கவுள்ளதால், அதில், மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஒரு இயக்கத்தை துவங்கி, உண்மையான போராட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் நடத்துகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில், இடதுசாரி கட்சிகளும், காங்கிரசும், இந்த போராட்டத்தை வன்முறைக் களமாக பயன்படுத்துகின்றன. எனவே, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இதேபோல், பகுஜன் சமாஜ் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதியும், இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்