Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவிய காவல்துறை அதிகாரி கைது

ஜனவரி 13, 2020 03:59

காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக காவல்துறை அதி காரி தாவீந்தர் சிங்கை போலீஸார் கைது செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலை யில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றபோது, அது நிற்காமல் சென்றது. இதையடுத்து, அந்த காரை போலீஸார் துரத்திச் சென்று மடக்கினர். பின்னர், காரில் இருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், காரை ஓட்டிச்சென்றது காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தாவீந்தர் சிங் என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், காரில் இருந்த தாவீந்தர்சிங் உட்பட மூவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, அவர்களில் டிஎஸ்பி தாவீந்தர் சிங்கை தவிர மற்ற இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பதும், அவர்களுக்கு பல வருடங்களாக தாவீந்தர் சிங் பல்வேறு உதவிகளை செய்து வந்திருப்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ‘ரா' மற்றும் ஐ.பி. உளவு அமைப்புகளுக்கு ஐ.ஜி. விஜயகுமார் தகவல் தெரிவித்தார். இதன்பேரில், அவர்கள் மூவரிடமும் உளவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் ஐ.ஜி. விஜயகுமார் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தாவீந்தர் சிங், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அவற்றை இப்போது கூற முடியாது. இந்த விஷயத்தில் ரகசியம் காக்கப்படுவது அவசியம்.

தற்போது கைது செய்யப்பட்ட இரண்டு தீவிரவாதிகளில் ஒருவரின் பெயர் நவீத் என்பது தெரியவந்துள்ளது. சோபியான் பகுதியில் காவலராக பணிபுரிந்து வந்த இவர், 2017-ம் ஆண்டு காவல் நிலையத்தில் இருந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார். பின்னர், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த அவர், ராணுவத்தினர், போலீஸார் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளார். அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

இதனிடையே, புல்வாமா மாவட்டத்தில் உள்ள குல்ஷன்போரா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினருடன் நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்