Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் திருப்பதியில் மீட்பு

ஜனவரி 16, 2020 10:42

திருத்தணி: திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டி. திருப்பூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது நான்கு மாத குழந்தை நிஷாந்த்.

உள்ளாட்சி தேர்தலில் திருத்தணி ஒன்றியம் 2-வது வார்டில் பூங்கொடி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருத்தணி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 11-ந் தேதி நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கவுன்சிலர் பூங்கொடி அவரது மகன் நிஷாந்த், தாய் வசந்தி ஆகியோர் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பூங்கொடியின் கணவர் கோட்டி கடந்த 10-ந் தேதி திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஆனால், மாயமான பூங்கொடி உள்பட 3 பேரும் மீட்கப்படவில்லை. இதையடுத்து கோட்டி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடத்தப்பட்ட மனைவி பூங்கொடி, மகன் நிஷாந்த், மாமியார் வசந்தி ஆகியோரை மீட்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து மகன், தாயுடன் கடத்தப்பட்ட கவுன்சிலர் பூங்கொடியை மீட்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவிட்டார். திருத்தணி டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கவுன்சிலர் பூங்கொடி உள்பட 3 பேரும் திருப்பதியில் உள்ள லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இது பற்றி உடனடியாக திருப்பதி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் உடனடியாக குறிப்பிட்ட லாட்ஜை சுற்றி விரைந்து சோதனையிட்டனர். இதில் ஒரு அறையில் பூங்கொடி, அவரது மகன் நிஷாந்த், தாய் வசந்தி ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவர்களை போலீசார் மீட்டனர். போலீசார் வருவதை அறிந்ததும் கடத்தல்காரர்கள் அனைவரும் தப்பி சென்றுவிட்டனர். அவர்களை பிடிக்க விசாரணை நடந்து வருகிறது.

கடத்தப்பட்ட கவுன்சிலர் பூங்கொடி, அவரது மகன் நிஷாந்த், தாய் வசந்தி ஆகியோர் மீட்கப்பட்டது குறித்து திருப்பதி போலீசார் திருவள்ளூர் மாவட்ட போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தனிப்படை போலீசார் விரைந்து சென்று பூங்கொடி உள்பட 3 பேரையும் திருத்தணிக்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் 3 பேரையும் திருத்தணி மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்துகிறார்கள். கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்