Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாளை காணும் பொங்கல் மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: பொழுது போக்கு மையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள்

ஜனவரி 16, 2020 11:50

சென்னை: நாளை காணும் பொங்கலையொட்டி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள்  மெரினா கடற்கரையில் ஒன்று கூடி காணும் பொங்கலை கொண்டாட உள்ளனர். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது. நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், ஒட்டுமொத்தமாக சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு அதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் கடலுக்குள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளின் கையில் டேக்,  குதிரைப்படை, கடலோர காவல்படை மட்டுமல்லாமல் தீயணைப்பு துறை ஆகியோர் ஆயத்த நிலையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல பெசன்ட்நகர், திருவான்மியூர், கோவளம், மகாபலிபுரம் ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் அதிகமாக கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர்கள் பூங்கா, செம்மொழி பூங்கா உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு மையங்களிலும், பார்க்கிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும், பொதுமக்களுக்கான வசதிகளை தமிழக அரசும் செய்துள்ளன.

தலைப்புச்செய்திகள்