Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெற்றோரின் பிறப்பிடம் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பது கட்டாயமல்ல: மத்திய அரசு

ஜனவரி 18, 2020 06:26

புது தில்லி: தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பின் போது பெற்றோரின் பிறப்பிடம் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பது கட்டாயமல்ல என்று மூத்த அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் மத்திய அரசின் நடைமுறை குறித்த மாநாடு நேற்று புது தில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்கள் எழுப்பிய எதிர்ப்புகளுக்கு மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பலருக்கும் தாங்கள் பிறந்த இடம் மற்றும் தேதியே தெரியாத நிலையில், தங்களது பெற்றோர் பிறந்த இடம் மற்றும் பிறந்த தேதியை எவ்வாறு அளிக்க முடியும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், இதுபோன்ற கேள்விகள் முந்தைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் எழுப்பப்பட்டுள்ளன. தற்போது, ஒருவரது பிறந்த இடம், பிறந்த தேதியுடன் அவர்களது பெற்றோரின் பிறந்த இடம் மற்றும் பிறந்த தேதியும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது கட்டாயமல்ல, தெரிந்திருந்தால், ஒருவர் தாமாக முன் வந்து விவரங்களை அளிக்கலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

‘தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆா்) என்பது தேசிய அளவிலான குடிமக்கள் பதிவேடு(என்ஆா்சி) கணக்கெடுப்புக்கான அடிப்படை வடிவமாகும். எனவே, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான தயாரிப்புப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று கூறி மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வது தொடா்பான மாநாடு, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தொடக்கி வைத்தார். இதில், மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா, பல மாநிலங்களின் தலைமைச் செயலா்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அதில், என்பிஆா் கணக்கெடுப்பு நடத்தப்படும் முறைக்கு ராஜஸ்தான், கேரளம் ஆகிய பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனா். கூட்டத்துக்குப் பிறகு ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலா் டி.பி.குப்தா கூறியதாவது:

நம் நாட்டில் பலருக்கும் தாங்கள் எந்த ஊரில் பிறந்தோம் என துல்லியமாகத் தெரியாது. ஆனால், என்பிஆா் கணக்கெடுப்பு படிவத்தில், ஒருவரின் பிறந்த ஊா், அவரது தாய்-தந்தையா் பிறந்த ஊா் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளை கேட்பதற்கான நோக்கம் என்னவென்று விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே, இந்தக் கேள்விகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

இருப்பினும், அந்தக் கேள்விகளுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை; விருப்பமிருந்தால் தாமாக முன்வந்து தகவல்களை தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அதிகாரிகள் பதிலளித்தனா் என்றார் டி.பி.குப்தா.

அதைத் தொடா்ந்து, கேரள அரசின் பிரதிநிதி கூறுகையில், ‘என்பிஆா் பதிவேடு தயாரிப்பில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கும் வரை என்பிஆா் பதிவேடு பணிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எனினும், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும்’ என்றார்.

மேற்கு வங்கத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த மாநிலத்தைச் சோ்ந்த யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

தலைப்புச்செய்திகள்