Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

30 லட்சம் பாஸ்டேக்: பேடிஎம் நிறுவனம் அபாரம்

ஜனவரி 18, 2020 06:27

சென்னை: 'பேடிஎம்' நிறுவனம் வாயிலாக 30 லட்சம் பேருக்கு சுங்கக்கட்டணம் செலுத்தும் 'பாஸ்டேக்' ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் பணமில்லா பரிவர்த்தனை வாயிலாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்காக 'பாஸ்டேக்' திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டிச. 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியது. இந்த 'பாஸ்டேக்' வங்கிகள் வாயிலாக மட்டுமின்றி பேடிஎம் பண வங்கி வாயிலாகவும் வழங்கப்படுகிறது. பாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்கி வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டிவிட்டால் சுங்கச்சாவடியில் காத்திருக்க தேவையில்லை. அங்குள்ள எலக்ட்ரானிக் சென்சார் கருவி வாயிலாக சாலையை பயன்படுத்தியதற்கான கட்டணம் கழித்துக் கொள்ளப்படும்.தற்போது 'பாஸ்டேக்' வழங்குவதில் பேடிஎம் நிறுவனம் புது சாதனையை படைத்து உள்ளது. இதுவரை 30 லட்சம் வாகனங்களுக்கு அவற்றை பேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது.

நாட்டிலேயே அதிக பாஸ்டேக் வழங்கிய பெருமையை பேடிஎம் நிறுவனம் பெற்றுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் 50 லட்சம் பாஸ்டேக் வினியோகம் செய்வதற்கு பேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடு முழுதும் 10 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய வாகனங்களை வாங்குவோருக்கு உடனுக்குடன் 'பாஸ்டேக்' வழங்குவதற்கு மாருதி சுசூகி ஹூண்டாய் ஹோண்டா கியா எம்.ஜி. மோட்டார் ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே பேடிஎம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து பேடிஎம் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சதீஷ் குப்தா கூறியதாவது: மத்திய அரசின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு நாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சி ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். இவ்வாறு அவர்கூறினார்

தலைப்புச்செய்திகள்