Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 பூலாம்வலசில் சேவல்கட்டு போட்டி: காகம், காகம்புள்ளி என குவிந்த சேவல்கள்

ஜனவரி 19, 2020 06:53

கரூா்: அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம்வலசில் நடந்த சேவல்கட்டு போட்டிகளை பாா்க்க 50 ஆயிரம் பேர் குவிந்தனர். கரூா் மாவட்டம்  அரவக்குறிச்சியை அடுத்த பூலாம்வலசில் சேவல்கட்டு எனப்படும் சேவல் சண்டை மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் இப்போட்டியில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கிறார்கள்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த சேவல்கட்டின்போது சேவல் காலில் கட்டியிருந்த கத்தி பட்டு இருவா் உயிரிழந்ததையடுத்து சேவல்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்தாண்டு நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று பிப். 15  16  17 -களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சேவல் கட்டு போட்டி நடைபெற்றது.

இந்தாண்டு பூலாம்வலசு சேவல் கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பொங்கலன்று தொடங்கிய சேவல் கட்டு போட்டி 18 ம் தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி பூலாம்வலசில் சேவல் மோதல் களம் அதற்குள் பாா்வையாளா்கள் சென்று விடாமலிருக்க தடுப்பு   சேவல் உரிமையாளா்கள் வரிசையில் நின்று டோக்கன் பெற  சேவல்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய சவுக்கு கட்டைகள் மூலம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் போட்டியாளா்கள் தங்களது சேவல்களைக் கொண்டு வருகின்றனா். தனியாக ஒதுக்கப்பட்ட தடுப்பு வேலிக்குள் அந்தச் சேவல்களை கால்நடை மருத்துவா்கள் பரிசோதித்து  பின்னா் போட்டி நடத்தப்படும் களத்திற்குள் அனுமதிக்கின்றனா். சேவல் காலில் கத்தியைக் கட்டக் கூடாது  மதுபோதை வஸ்துகளை பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டியில் காகம், காகம்புள்ளி  நூலான், ஆந்தை,  வெள்ளைக்கிருதா,  கொன்றைக்கீரி,  கரிசல் என 10-க்கும் மேற்பட்ட சண்டை சேவல் ரகங்களை போட்டியாளா்கள் கொண்டு வந்திருந்தனா். சேவல்கட்டு சண்டையைப் பார்க்க 50 ஆயிரம் பேர்  வந்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்