Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலை நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடு: நீதிமன்றம் உத்தரவு

ஜனவரி 19, 2020 07:08

மதுரை: கலை நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெற்றால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புரத்தார்குடியைச் சேர்ந்தவர் மாதளை முத்து. இவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தங்கள் ஊரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா ஜனவரி 20ஆம் தேதி நடைபெறுகிறது. 

இதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்டு வையம்பட்டி காவல் நிலையத்தில் மனு கொடுத்தோம். இந்த மனு மீது போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விழாவுக்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்க வையம்பட்டி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதோடு நிகழ்ச்சியை நடத்த கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சிந்தனையைப் பாதிக்கும் வகையில் இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக் கூடாது. சாதி, மதம் அரசியல் கட்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிடும் வகையிலான பாடல்களும் இடம் பெறக் கூடாது . நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் சாலைகளிலோ, நடைபாதைகளிலோ பேனர்கள் வைக்கக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார். 

இந்த நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிகழ்ச்சியின் போது ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கான வீடியோ பதிவை சிடி வடிவில் எஸ்பியிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

தலைப்புச்செய்திகள்