Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு முடிவெடுக்கவேண்டும்: திமுக தீர்மானம்

ஜனவரி 21, 2020 08:27

சென்னை: தமிழக மக்கள் நலன் கருதியும், தேசிய ஒற்றுமை - ஒருமைப்பாடு கருதியும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று உடனடியாக அதிமுக அரசு அறிவிக்க வேண்டும் என திமுக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 550 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள், கூட்டணிக் கட்சிகளுடனான உறவு, உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, தோல்வி, வரும் மாநகராட்சி, நகராட்சித் தேர்தல், மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மேலும் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

* உள்ளாட்சி மன்றத் தேர்தலில், மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுகவிற்கு மகத்தான ஆதரவினையும் - மாபெரும் வெற்றியையும் வழங்கிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இந்தச் செயற்குழு கூட்டம் தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 512-ல் திமுக 242 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளுடன் 266 வார்டுகளிலும் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய வார்டு பதவிகளில் 5076-ல் திமுக 2090 வார்டுகளிலும், கூட்டணிக் கட்சியுடன் சேர்த்து 2,318 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

* உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுவதையும் மதித்து - மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலையும், அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலையும் உடனடியாக நடத்திட வேண்டும் என்று இந்தச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

* அரசியல் சட்டத்திற்கு விரோதமான - நாட்டின் பன்முகத்தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் 2019-ம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வாக்களித்திடச் செய்து - மாநில மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்திடும் வகையில், மாபெரும் பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தச் செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கேரளா, பஞ்சாப் மாநில சட்டமன்றங்கள் தீர்மானமே நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் தனிநபர் தீர்மானத்தையும் சட்டப்பேரவையில் ஏற்க மறுத்து, தமிழக மக்களுக்கு அதிமுக அரசு மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது.

தமிழக மக்கள் நலன் கருதியும், தேசிய ஒற்றுமை - ஒருமைப்பாடு கருதியும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று உடனடியாக அதிமுக அரசு அறிவிக்க வேண்டும்.

திருத்தச் சட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியான பதிவேடுகள் குறித்து விதண்டா வாதங்கள் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தலைப்புச்செய்திகள்