Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

100 நாள் திட்டத்தில் ரூ.198 கோடி ஊழல்: திருச்சி மக்கள் குறை தீர் கூட்டத்தில் புகார்

ஜனவரி 21, 2020 08:28

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ.198 கோடி ஊழல் நடந்துள்ளதாக மக்கள் குறை தீர் கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில்  நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா  ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது பட்டா மாறுதல் சாதிச்சான்றுகள்  இதர சான்றுகள் உள்பட மொத்தம் 354 மனுக்கள் பெறப்பட்டன. 

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி  சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பழனிதேவி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பத்து ரூபாய் இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சதீஷ்குமார் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது்- 100 நாள் வேலைஉறுதி திட்டத்தில்  100 சதவீதம் மனித சக்தியை கொண்டு கட்டிடங்கள் கட்டுதல்  ஏரி-குளம் தூர்வாருதல்  பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது. கிராமப்புறங்களில் நடக்கும் இந்த பணியை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்வதுடன் கிராம மக்கள் சமூக தணிக்கை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் வாதங்கள் செய்து ஒப்புதல் வழங்கப்படும். 

கடந்த 3 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் ரூ.198 கோடிக்கு மேல் ஊழல் இத்திட்டத்தில் நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்  பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் திலீப்குமார் கொடுத்துள்ள மனுவில்  திருச்சி காந்தி மார்க்கெட்  வாழைக்காய் மண்டி  தாராநல்லூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதை விற்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்