Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்: கி.வீரமணி எச்சரிக்கை

ஜனவரி 22, 2020 03:23

சென்னை: தவறான தகவலை ஆதாரமாக காட்டி பேசும் ரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
நடிகர் ரஜினிகாந்தினுடைய பேச்சில் குழப்பம், முரண்பாடு தெரிகிறது. அவர் தேவையில்லாமல் தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக, குளிக்கப்போய் சேற்றை மீண்டும் பூசிக்கொள்கிறார். தவறான தகவலை வெளியிட்ட இன்னொரு பத்திரிகையை தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்து பேசுகிறார். தவறான தகவலை ஆதாரமாக காட்டி பேசுவது தவறானது.

துக்ளக் ஆசிரியர் ‘சோ’-வை அவர் பாராட்டி பேச வேண்டும் என்று சொன்னால், அதற்கு துக்ளக் பத்திரிகையைத்தானே சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். இன்னொரு பத்திரிகையில் வந்ததை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இந்த தவறான கருத்தை நடந்தது என்று அவர் சொல்வதற்கு, நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

அதுவும் அவருக்கு அந்த காலக்கட்டத்தில் அரசியலை பற்றி ஆனா, ஆவன்னா கூட தெரியாது. பெருந்தன்மை உள்ளவர்கள், மனிதப் பண்பாடு உள்ளவர்கள், தவறு செய்யும்போது அதற்கு மன்னிப்பு கேட்கிறோம் என்று சொல்வது மனிதப் பண்பாடு. ஆனால், மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று சொல்வது அவரது தன்மையை காட்டுகிறது. இதைப்பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.

அவரைப் பற்றியே பல்வேறு செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன. அத்தனையையும் வைத்துக்கொண்டு அவர் பற்றி பேசினால், அவர் நிலை என்னவாகும். மன்னிப்பு கேட்பதோ, கேட்காததோ அவரைப் பொருத்தது. அவருடைய பண்பாட்டைப் பொருத்தது. இதற்கு நிச்சயமாக உரிய நேரத்திலே அவர் காலாகாலம் வருத்தப்பட வேண்டிய நிலை வரும்.

பெரியாரை பற்றி எத்தனையோ பேர் விமர்சனம் செய்துவிட்டார்கள். ஆனால், அப்படி விமர்சித்தவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். பெரியார் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இவை எல்லாம் அடையாளங்கள். இதுமாதிரி இன்னும் அவர் நிறைய பேச வேண்டும். அதை வரவேற்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்