Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் 5000 இடங்களில் போராட்டங்கள் நடக்கும்: சந்திரசேகர் ஆசாத்

ஜனவரி 23, 2020 06:29

புதுடெல்லி: இன்னும் 10 நாட்களில் நாடு முழுக்க 5000 இடங்களில் மிகப்பெரிய அளவில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடக்கும் என்று பீம் ஆர்மி தலைவர் சந்திசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் கடந்த 10 நாட்களாக தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்தியாவில் நடக்கும் சிஏஏ போராட்டத்திற்கு இது மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஷாஹீன் பாக் பகுதிக்கு சென்றார். சந்திரசேகர் ஆசாத்தை டெல்லிக்கு செல்ல கூடாது என்று டெல்லி நீதிமன்றம பெயில் நிபந்தனையில் குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் இந்த நிபந்தனையை நேற்று முதல் நாள் டெல்லி நீதிமன்றம் மாற்றி, சந்திரசேகர் ஆசாத் டெல்லி செல்ல அனுமதி அளித்தது. இதனால் நேற்று சந்திரசேகர ஆசாத் டெல்லிக்கு சென்றார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சந்திரசேகர் ஆசாத், டெல்லியில் நடக்கும் இந்த போராட்டம் நாட்டிற்கே அடையாளமாக திகழ்கிறது. இந்த போராட்டத்த்தில் கலந்து கொண்ட பெண்கள் எல்லோரையும் நான் பாராட்டுகிறேன்.

நீங்கள்தான் இந்த நாட்டை காக்க போவது. இது வெறும் அரசியல் போராட்டம் அல்ல. இந்திய இறையாண்மையை காப்பதற்கான போராட்டம் இது. இதை யாரும் மறக்க வேண்டாம். பெண்கள் இந்த நாட்டை வழி நடத்துவார்கள் என்று அம்பேத்கார் குறிப்பிட்டு இருந்தார். அது இப்போது நேரில் நடக்கிறது. இந்திய இறையாண்மை மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதை காக்கும் பொறுப்பை பெண்கள் கையில் எடுத்துள்ளனர். அதை இந்த போராட்டம் மூலம் திறம்பட செய்துள்ளனர். இந்தியாவிற்காக பெண்கள் தீவிரமாக களமிறங்கி போராடுகிறார்கள்.

இந்த அரசு சிஏஏவை அமல்படுத்த வேண்டும் என்றால் எங்களை தாண்டித்தான் போக வேண்டும். எங்கள் பிணத்தை தாண்டி சென்றுதான் இந்த அரசால் சிஏஏவை அமல்படுத்த முடியும். அதை மறக்க வேண்டாம். இந்த சட்டத்தை திரும்ப பெறுவதை தவிர அவறளுக்கு வேறு வழியில்லை. மக்களின் கோரிக்கையை கேட்பதை தவிர இந்த அரசுக்கு வேறு வழியில்லை.

இன்னும் 10 நாட்களில் இந்த பெண்கள் போராட்டம் நாடு முழுக்க பரவும். நாடு முழுக்க 5000 இடங்களில் இதேபோல் போராட்டம் நடக்கும். மக்களை நாங்கள் ஒன்று திரட்டுவோம். மான் கி பாத்தில் மக்களிடம் பேசி வரும் மோடி, முதல் முறையாக மக்கள் குரலை கேட்க போகிறார். முதல் முறையாக மக்களின் மான் கி பாத்த்தை பிரதமர் மோடி கேட்க போகிறார், என்று சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்