Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சூறையாடப்பட்ட சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் மாயம்

ஜனவரி 28, 2020 06:56

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூரில் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட போது, அங்கிருந்த ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என சுங்கச்சாவடி பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோயம்பேட்டிலிருந்து கிளம்பிய அரசு விரைவு பஸ், திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், பரனுார் சுங்கச்சாவடிக்கு, கடந்த ஜன.,25 அதிகாலை, 1:00 மணிக்கு வந்தது. அப்போது, சுங்கச்சாவடி ஒப்பந்த ஊழியர்கள், ஓட்டுனரிடம், பணம் செலுத்துவது சம்பந்தமாக கேட்டனர். அதற்கு ஓட்டுனர், 'நடத்துனர் இறங்கி வருகிறார்' எனக் கூறினார்.இதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த ஊழியர்கள், ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கினர்.

அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டதை பார்த்த, அவ்வழியே சென்ற அரசு பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள், சுங்கச்சாவடியின், 12 பூத்துகளையும் அடித்து நொறுக்கினர்; ஊழியர்களையும் தாக்கினர்.

அலுவலகத்திற்குள் புகுந்து, கணினி, நவீன கேமரா ஆகியவற்றை சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தை பயன்படுத்தி, சிலர், பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இருவர் கைதாகியுள்ளனர். இந்த மோதல் காரணமாக கடந்த 2 நாட்களாக சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்கப்படவில்லை. மூன்றாவது நாளாக இன்றும்(ஜன.,28) வாகனங்கள், பணம் செலுத்தாமல் இலவசமாக செல்கின்றன.

இந்நிலையில், மோதல் நடந்த அன்று சுங்கச்சாவடியில் இருந்த ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என சுங்கச்சாவடி பொறுப்பாளர் செங்கல்பட்டு தாலுக்கா போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்