Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை

ஜனவரி 28, 2020 06:57

கோவை: சீன நாட்டில் உள்ள ஹூ பெய் மாகாணத்தில் வுகான் நகரில் இருந்து  முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் தற்போது வரை 80 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரசால் 29ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வைரசின் தாக்கம் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.

இந்தநிலையில் கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல் மற்றும் சென்னையை சேர்ந்த இருவர் என மொத்தம் 8 பேர் நேற்று  சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தனர்.

விமான நிலையத்தில் அவர்களை சுகாதாரதுறை அதிகாரிகள் முழுமையாக பரிசோதனை செய்தனர். சோதனையில் 8 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள்  வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் சுகாதாரதுறை அதிகாரிகள் சார்பில் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது இடங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற பொது நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது எனவும், வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.

தலைப்புச்செய்திகள்