Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரள சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளி

ஜனவரி 29, 2020 07:25

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்தை சட்டத்தை ரத்து செய்யக்கோரி, கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், கேரள அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும், முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் இடையே மோதல் முற்றி உள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு தொடர்ந்ததை ஆளுநர் விரும்பவில்லை. தன்னிடம் தகவல் தெரிவிக்காமல், சுப்ரீம் கோர்ட்டை அணுகியது முறையற்ற செயல் என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்திருந்தார். சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பான வாசகத்தை படிக்க மாட்டேன் எனவும் கூறியிருந்தார். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கேரள சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநரை உரையாற்ற வந்தார். அவரை சபைக்கு வரவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்றும், அவர் சட்டசபையில் இருந்து திரும்பி போக வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவைக்காவலர்கள் உதவியுடன் ஆளுநரை முதல்வர் பினராயி விஜயன் பாதுகாப்பாக அவரது இருக்கைக்கு அழைத்து வந்தார். ஆளுநர் தனது உரையைத் தொடங்கியபோது தொடர்ந்து எதிர்ப்பு முழக்கமிட்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள்,  வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தலைப்புச்செய்திகள்