Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக கூட்டணி- தேமுதிகவுடன் இன்று உடன்பாடு ஏற்பட வாய்ப்பு

மார்ச் 06, 2019 07:42

சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 7 தொகுதிகள் கேட்டு வலியுறுத்தி வருவதால் கூட்டணி ஒப்பந்தம் தாமதமாகியுள்ளது. எனினும் இன்று உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.  

இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வைச் சேர்க்க திட்டமிடப்பட்டது. இதற்காக பா.ஜனதா தலைவர்கள் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினர். அப்போது தே.மு.தி.க. தரப்பில் பா.ம.க.வுக்கு கொடுக்கப்பட்டது போல 7 தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அ.தி.மு.க. ஏற்கவில்லை.  

இதன் காரணமாக அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இணைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விஜயகாந்தின் மனதை மாற்றி எப்படியாவது கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.  

ஆனால் விஜயகாந்த் தனது முடிவில் இருந்து பின் வாங்காமல் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார்.  

கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர்கள் மட்டுமே விஜயகாந்தை சந்தித்து பேசி இருந்த நிலையில், அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் அவரை சந்திக்காமலேயே இருந்தனர். இதனால் அ.தி.மு.க., தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.  

நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், விஜயகாந்தை திடீரென சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்துக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டது.  

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், தே.மு.தி.க.வுடனான கூட்டணி விரைவில் முடிவாகும் என்றார். 

தலைப்புச்செய்திகள்