Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூர் டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் சாலை விபத்தில் தாயாருடன் பலி

ஜனவரி 29, 2020 03:03

திருப்பூர்: மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக பத்திரிகை வைக்கச் சென்ற பிரபல ஆங்கில நாளிதழ் செய்தியாளரின் கார் மீது அரசுப்பேருந்து மோதியதில் செய்தியாளரும் அவரது தாயாரும் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் செய்தியாளராகப் பணிபுரிந்தவர் ராஜசேகரன் (32). இவருக்குக் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது ராஜசேகரனின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். முதல் பிரசவம் என்பதால் மனைவிக்கு வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதற்காக தேதி குறித்து நிகழ்ச்சிக்கான பத்திரிகை அடித்து உறவினர்களுக்குத் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் நேரில் சென்று கொடுக்கும் பணியில் ராஜசேகரன் ஈடுபட்டிருந்தார். இன்று காலை மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர்கள் சிலருக்குப் பத்திரிகை வைப்பதற்காக அவரும், அவரது தாயார் யமுனா ராணி (52), சகோதரி பானுப்பிரியா (31), அவரது ஆண் குழந்தை இன்ப நித்திலன் (2) ஆகியோருடன் காரில் மேட்டுப்பாளையத்துக்குச் சென்றார்.

உறவினர்களுக்குப் பத்திரிகை கொடுத்துவிட்டு மதியம் இரண்டு மணி அளவில் அனைவரும் காரில் திருப்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ராஜசேகரன் ஓட்டி வந்தார். அவினாசி போலீஸ் சரகம் அன்னூர் அருகே உள்ள நரியம்பள்ளி புதூர் என்ற இடத்தில் ஒரு வளைவில் கார் வேகமாகத் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காருக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே ராஜசேகரனின் தாயார் ஜமுனாராணி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜசேகரன், அவரது சகோதரி மற்றும் மகன் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மூவரும் கோவை அழைத்துச் செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி செய்தியாளர் ராஜசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சகோதரி, மற்றும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் ராஜசேகரன் இளம் வயதில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அம்மாவட்டச் செய்தியாளர்கள், அவர் பணியாற்றிய நாளிதழ் ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்