Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கமிஷனர் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி: தொழில் அதிபர் கைது

ஜனவரி 30, 2020 11:53

சென்னை: சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பெட்ரோல் பங்குகளில் உரிமத்தை புதுப்பிக்க சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது.

இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து கமிஷனரிடமும், நிர்வாக பிரிவு துணை கமிஷனரிடமும் உரிய அனுமதியை பெற வேண்டும். இவர்கள் இருவரும் கையெழுத்து போட்ட பிறகுதான் பெட்ரோல் பங்க் உரிமத்தை புதுப்பித்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் இந்த அனுமதியை பெறுவதற்கான தடையில்லா சான்றுக்கு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனின் கையெழுத்தை போலியாக போட்டுள்ளார். இந்த துணிகர மோசடி போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சிவா. இவர் தனது தந்தையின் பெயரில் 16 இடங்களில் பெட்ரோல் பங்குகளை நடத்தி வருகிறார். ஆண்டு தோறும் பெட்ரோல் பங்குக்கான தடையில்லா சான்றிதழை போலீசாரிடம் பெற்று நடத்தி வந்தார். இந்த நிலையில் பெட்ரோல் பங்க் உரிமத்துக்கான தடையில்லா சான்றிதழை பெறுவதில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பெட்ரோல் பங்க் அதிபர் சிவா போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் கையெழுத்தை கம்ப்யூட்டரில் தயாரித்து போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடியின் பின்னணியில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பிடிக்கவும் போலீசார் வலை விரித்துள்ளனர். விரைவில் மோசடி பேர்வழிகள் அனைவரும் சிக்குவார்கள் என்று தெரிகிறது. இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்