Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 லட்சம் வரை வருமான வரி இல்லை: பட்ஜெட்டில் அறிவிப்பு

பிப்ரவரி 01, 2020 09:00

புதுடெல்லி: பட்ஜெட்டில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த, வருமான வரி விதிப்பில் புதிய வரம்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இப்போது வரை 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 5% வருமான வரி விதிக்கப்படுகிறது. நிதி அமைச்சரின் அறிவிப்பில் வருமான வரியில் புதிய வரம்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரையில் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10% வருமான வரி விதிக்கப்படும். 7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15% வருமான வரி விதிக்கப்படும்.

10 லட்சம் ரூபாய் முதல் 12.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 20% வருமான வரியும், 12.5 முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலான 25% வருமான வரியும் விதிக்கப்படும். ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு மேல் எவ்வளவு வருமானம் இருந்தாலும் 30% வருமான வரி விதிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.

நிதி அமைச்சர் தனது அறிவிப்பில் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கான வருமான வரி விதிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளார் . எனவே மாத வருமானம் 41 ஆயிரத்து 600 ரூபாய் கொண்டவர்கள் இனி வருமான வரி கட்டத் தேவையில்லை. அதேநேரம் வருமான விலக்குக்கான கழிவுகளில் 70% ரத்து செய்யப்படுகிறது என்றும் அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். 

இதனால் இந்த வருமான வரி சலுகை எந்த அளவுக்குப் பயன் தரும் என்பதும் விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது. இந்த வருமான வரிக் குறைப்பால் 40 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்.

தலைப்புச்செய்திகள்