Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மயில்சாமி அண்ணாதுரை

பிப்ரவரி 02, 2020 08:03

கோபி: கோபி அருகே உள்ள கூகலூர், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி பவள விழா நடைபெற்றது. அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ரமா ராணி வரவேற்றார்.

விழாவில் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

உலக நாடுகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புவதற்கு பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மங்கல்யான் விண்கலத்தை முதல் முயற்சியிலேயே விண்ணில் செலுத்தி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர்.

நான் பள்ளியில் படித்ததற்கும், தற்போது நீங்கள் கல்விகற்கும் முறையிலும் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசு ஆகும் என கூறியிருந்தார். தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தைப் பெற்று வல்லரசு ஆகியுள்ளது.

நானும் உங்களைப் போல அரசு பள்ளியில் தாய் மொழியான தமிழில் தான் படித்தேன். மாணவ, மாணவிகள் படிக்கும் போது ஒவ்வொரு நாளும் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர் கல்வி பயில்பவர்கள் 49 சதவீதமாக உயர்ந்துள்ளனர். எந்த துறைக்குச் சென்றாலும் மாணவ, மாணவிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் உயர முடியும். மாணவர்களாக நீங்கள் தாய், தந்தையர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்கள் தேர்வில், மதிப் பெண்களைப் பெறுவதில் எப்படி போட்டி உள்ளதோ, அதுபோல அரசு பள்ளிகளை மேம்படுத்துவதில் பொது மக்களிடம் போட்டி மனப்பான்மை வளர வேண்டும்.

சமீபத்தில் நான் விண்ணும், மண்ணும் என்ற புத்தகம் எழுதியுள்ளேன். எனக்கு தமிழ்மொழி மீதுதான் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால், பள்ளியில் படிக்கும் போது அறிவியல் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், நான் விஞ்ஞானி ஆனேன்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிடைக்கும் வாய்ப்புக்களை மாணவ, மாணவிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அடல் டிங்கர் லேப் எனப்படும் அறிவியல் ஆய்வகம் அமைப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. விளாயாட்டு மைதானம், நூலகம் அமைப்பது போல, அறிவியல் ஆய்வகம் மாணவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டணத்தில் ராக்கெட் தளம் அமைக்கும் பணி நடக்குமா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மயில்சாமி அண்ணாதுரை கூறும் போது, அதற்கான முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது என்றார்.

தலைப்புச்செய்திகள்