Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: மேலும் 3 பேர் சிறையில் அடைப்பு

பிப்ரவரி 03, 2020 06:43

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 16 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப் - 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அரசுப் பணிகளில் உள்ள நிலையில், முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி டி.என்.பி.எஸ்.சி. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதி குரூப்-2ஏ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற 42 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர்.

ஏற்கனவே குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணணூரைச் சேர்ந்த முதல்நிலை காவலர் சித்தாண்டி, குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற வைப்பதற்கு தேர்வர்களிடம் 13 லட்சம் ரூபாய் வரை சித்தாண்டி, லஞ்சமாக பெற்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்று காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகன் மற்றும் சித்தாண்டியிடம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்று நெல்லை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஜெயராணி ஆகியோரிடம், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்த நிலையில், இருவரையும் கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து காவலர் சித்தாண்டியை குரூப்-2ஏ முறைகேடு வழக்கிலும் முக்கியகுற்றவாளியாக சேர்த்த போலீசார், அவர் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுவதற்காக போலி ஆவணம் தயாரித்தல், பொய்யாக புனையப்பட்ட ஆவணங்களை உண்மை என கூறி பயன்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் சுதாராணி மற்றும் சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணி புரியும் விக்னேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சுதாராணி என்பவர் குரூப்-4 தேர்வில் விடைத்தாள்களை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட ஜெயக்குமாரின் கார்ஓட்டுநர் சம்பத் என்பவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை திருவிக நகரை சேர்ந்த விக்னேஷ், தூத்துக்குடியை சேர்ந்த சுதா, விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தை சேர்ந்த சுதாதேவி ஆகிய 3 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் தலா 9 லட்சம், 8 லட்சம், 7 லட்சம் ரூபாயை முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் கொடுத்து குரூப் 2ஏ தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்று அரசு ஊழியர்களாக பணியாற்றி வருவதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

மேலும் சுதாதேவி இடைத்தரகராக செயல்பட்டு 5 தேர்வர்களிடம் மொத்தம் 38 லட்சம் ரூபாய் பெற்று அவரது கணவர் மற்றும் சகோதரர் மூலம் ஜெயக்குமாரிடம் கொடுத்து முறைகேடு செய்ய கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. மூவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்