Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாமகவில் அந்நிய அறிவுக்கு தேவை இல்லை: ராமதாஸ்

பிப்ரவரி 03, 2020 06:44

சென்னை: பாமகவில் அந்நிய அறிவுக்கு தேவையும் இல்லை, தேடலும் இல்லை என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து பிரசாந்த் கிஷோரின் இந்திய அரசியல் செயல்பாட்டு குழு (ஐபிஏசி) பணியாற்றும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோரின் ஐபிஏசி அமைப்பு, 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்காகப் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திமுக மற்றும் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு ஏற்படும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகளை இடுவது, வெற்றிக்கான தேர்தல் கூட்டணியை உருவாக்குவது உள்ளிட்டவை ஐபிஏசியின் பணிகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

ஒவ்வொரு தொகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளும் ஐபிஏசி யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்று திமுகவுக்கு ஆலோசனையும் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சித் தொண்டர்களின் உழைப்பைத் தவிர்த்து, இத்தகைய நிறுவனத்துடன் திமுக கை கோத்துள்ளதை பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், திமுக தலைமை மீது அக்கட்சிக்கே நம்பிக்கையில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸும் இதனை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று (பிப்.3) தன் ட்விட்டர் பக்கத்தில், "எந்தத் தேர்தலாக இருந்தாலும் பாமகவின் வெற்றியை தலைமையின் வழிகாட்டுதலும், தொண்டர்களின் உண்மையான உழைப்பும், பாட்டாளிகளின் ஆதரவும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மக்களிடம் செல்வோம்! அவர்களுக்காக உழைப்போம்!! அவர்களால் வெல்வோம்!!!

வெற்றிடங்களைத்தான் காற்று நிரப்பும். பாமக அறிவார்ந்த இளைஞர்களும், உண்மையான தொண்டர்களும் நிறைந்த கட்சி. பாட்டாளி மக்கள் கட்சியுடன் இரண்டறக் கலந்த இளைஞர்கள் இயக்கத்தில் நிறைந்துள்ள நிலையில், அந்நிய அறிவுக்கு தேவையும் இல்லை; தேடலும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்