Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பச்சையப்பன் அறக்கட்டளை மேல்முறையீடு வழக்கில் தனிநீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

பிப்ரவரி 03, 2020 11:19

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை மேல்முறையீடு வழக்கில் தனிநீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடுகள் நடப்பதாக எல்.செங்குட்டுவன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், அறக்கட்டளையின் அறங்காவலர் தேர்தல் நடத்த தடை கேட்டும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பல மாதங்கள் நடந்த விசாரணைக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம், இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். அதில், பச்சையப்பன் அறக்கட்டளையின் மாற்றம் செய்யப்பட்ட விதி அடிப்படையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டும். அதற்காக தற்போதைய அறக்கட்டளை நிர்வாகியாக உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகத்தை அறக்கட்டளை தலைவராக இந்த நீதிமன்றம் நியமிக்கிறது. அவர் அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும்.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான அண்ணா அரங்கம், அம்மா அரங்கம் ஆகியவை முகூர்த்தம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்திற்கு 2017 மே 2ம் தேதி குத்தகை ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. அந்த குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. குத்தகை எடுத்த நிறுவனம் இந்த அரங்கங்களை 10 நாட்களுக்குள் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.  அறக்கட்டளையில் ஏற்கனவே இருந்தவர்கள் விதிகளை மீறி செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது அறக்கட்டளை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ள 2 கல்லூரிகளின் விளையாட்டு மைதானங்கள், வாகன நிறுத்தும் இடங்களாக மாற்றப்பட்டு இருப்பதை மாற்றி மீண்டும் கல்வி பணிக்காக பயன்படுத்த வேண்டும்.

அறக்கட்டளையின் செயல்பாடு குறித்து ஆண்டுக்கு ஒரு முறை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும், என தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனிநீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி பச்சையப்பன் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கானது, இன்று விசாரணைக்கு வந்தபோது, தனிநீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், பச்சையப்பன் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 10ம் தேதிக்கு ஒத்திவைக்கத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்