Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

11 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு: தாமதம் ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி

பிப்ரவரி 04, 2020 11:34

புதுடில்லி: ஜெயலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. முதல்வர் இ.பி.எஸ்., அரசு மீது கடந்த 2017 பிப்.,18 ல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது, பன்னீர்செல்வம் உள்ளிட்ட, அ.தி.மு.க.,வின், 11 எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர்.

சில மாதங்களுக்குப் பின், பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், இ.பி.எஸ்., தலைமையில் இணைந்தனர். பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட, பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, தி.மு.க., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 11 எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் வழக்கில், சபாநாயகருக்கு எப்படி நீதிமன்றம் உத்தரவிட முடியும். சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த மனுக்கள் அடிப்படை முகாந்திரமற்றது. இந்த வழக்குகளை அரசியல்சாசன அமர்வு தான் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில், எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரிடம் 2017 ல் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், 3 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறினார்.

இதன் பின்னர் நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கில் 3 ஆண்டுகள் காலதாமதம் தேவையற்றது. மனுக்கள் மீது முடிவு எடுக்காமல் சபாநாயகர் ஏன் காலதாமதம் செய்தார்? தேர்தல் ஆணையத்தில் இருந்த வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்புடையதா ? இதில் சபாநாயகருக்கு உள்ள சிக்கல் என்ன? சபாநாயகர் எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார்? சபாநாயகர் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தாரா? என சராமாரியாக கேள்வி எழுப்பியதுடன், இது குறித்து இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி சட்டசபை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்