Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: காவலர் பூபதி கைது

பிப்ரவரி 05, 2020 05:25

சிவகங்கை: தமிழக அரசில் காலியாக உள்ள குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சில மாதங்களுக்கு முன்பு போட்டித்தேர்வு நடத்தியது. தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய ஊர்களில் உள்ள மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 39 பேர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் வந்தது பெரும் சர்ச்சையானது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணைக்கு பின்பு அடுக்கடுக்காக பெரும் முறைகேடுகள் அம்பலத்துக்கு வரத்தொடங்கின. இதில் பல கோடி ரூபாய் கைமாறியது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக அரசு பணியில் இருப்பவர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி நடத்திய குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்தது தெரிய வந்தது. மோசடி செய்து தேர்ச்சி பெற்ற அரசு அதிகாரிகள் பலரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாகியிருந்த முக்கிய நபரான ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில், சித்தாண்டியின் கூட்டாளி காவலர் பூபதி என்பவர் சிபிஐசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கையை சேர்ந்த  காவலர் பூபதி ஆயுதப்படை காவலர் சித்தாண்டியுடன் சேர்ந்து முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது. சித்தாண்டி, பூபதியை ஒன்றாக வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்