Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி விரைவில் அழகிய மாநகரமாகும்: பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பெருமிதம்

பிப்ரவரி 05, 2020 09:45

திருச்சி: திருச்சி விரைவில் அழகிய மாநகரமாகும் என்று சத்திரம் பஸ் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்த பின் கலெக்டர் சிவராசு கூறினார். பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகரில் 26 பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சத்திரம் பஸ் நிலையத்தை இடித்துவிட்டு மேம்படுத்தப்பட்ட பஸ்  நிலையமாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து மாநகராட்சி அலுவலா்கள்  மற்றும் நிருபர்களுடன் திருச்சி கலெக்டர் சிவராசு களப்பயணம் மேற்கொண்டார். சத்திரம் பஸ் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்த பின் கலெக்டர் சிவராசு நிருபர்களிடம் கூறியதாவது
ரூ.17.34 கோடியில் சத்திரம் பேருந்துநிலையம் மேம்படுத்தப்படுகிறது. 2021 பிப்ரவரி மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருச்சி மாநகரைப் பொலிவுறு நகரமாக்குவதற்காக மொத்தம் 26 பணிகள் முதல் கட்டமாக செயல்படுத்தவுள்ளன. இதில்  பசுமைப் பூங்கா  போா் நினைவுச் சின்னம் அழகுப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளன. 6 பணிகளுக்கு ரூ.81.43 கோடி செலவில் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. 3-வது கட்ட புதை சாக்கடைத் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ரூ.561 கோடி மதிப்பில் 4 பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் திருச்சி அழகிய மாநகரமாகும். எளிமையாக வாழும் நகரம் எது என்பதை பொதுமக்கள் தோ்ந்தெடுக்க நாடு முழுவதும் முகநூல்  சுட்டுரை மூலம் மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. பிப்.5-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

அரைவட்ட சுற்றுச்சாலை பணிகளில் துவாக்குடி முதல் மாத்தூா் வரை பணிகள் முடிந்து  இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். மாத்தூா் முதல் பஞ்சப்பூா் வரையிலான பணிகள் ரயில்வே மேம்பால அனுமதி பெற்றவுடன் 8 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பஞ்சப்பூா் முதல் ஜீயபுரம் வரையில் சுற்றுச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்கு அனைத்துப் பணிகளும் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிந்த பிறகு ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் குறித்து இறுதி முடிவு எட்டப்படும். இவ்வாறு திருச்சி கலெக்டர் சிவராசு கூறினார்.

மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன்  மாநகராட்சிப் பொறியாளா் எஸ். அமுதவள்ளி  உதவி ஆணையா் வைத்தியநாதன்  செயற்பொறியாளா் குமரேசன்  உதவிச் செயற்பொறியாளா் ராஜேஸ்கண்ணன் ; தாசில்தார் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தலைப்புச்செய்திகள்