Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை உயர்வு: இன்று முதல் அமலுக்கு வந்தது

பிப்ரவரி 07, 2020 08:49

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது. இதன்மூலம் குவார்ட்டர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கொடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம்(டாஸ்மாக்) நடத்தி வருகிறது. கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வர உள்ளது.

அதன்படி, குவார்ட்டர் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.10-ம், ஆப் ரூ.20-ம், புல் ரூ.40-ம் கூடியுள்ளது. பீர் பாட்டிலும் தற்போது விற்கும் விலையுடன் கூடுதலாக ரூ.10 கொடுத்து மது பிரியர்கள் வாங்க வேண்டும். மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு வருவாயாக கூடுதலாக ரூ.2,200 கோடி கிடைக்கும்.

கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மதுபான விலை உயர்வு மது பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. நேற்று  முன் தினம் தந்தி டி.வி. முதல் முதலாக இந்த செய்தியை 8.55 மணிக்கு ஒளிப்பரப்பியது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தேவையான அளவுக்கு மதுபானங்களை வாங்கி வைத்துக்கொண்ட காட்சிகளையும் பார்க்க முடிந்தது. 
 

தலைப்புச்செய்திகள்