Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்கி டாக்கி வாங்கியதில் ரூ.84 கோடி முறைகேடு:- தொடர்பாக எஸ்பி, டிஎஸ்பி வீடுகளில் சோதனை

பிப்ரவரி 08, 2020 08:11

சென்னை: வாக்கி டாக்கி வாங்க ரூ.47.56 கோடி அரசு நிதி ஒதுக்கி உள்ள நிலையில் ரூ.83.45 கோடிக்கு நடைபெற்ற முறைகேடு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் என்று சோதனை நடத்தினர். 

2017-&-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் காவல் துறையை நவீனப்படுத்த போலீசுக்கு தேவையான நவீன உபகரணங்கள் வாங்க ரூ.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. காவல் துறையில் உள்ள நவீனமாக்குதல் என்ற பிரிவின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் காவல்துறைக்கு தேவையான ‘வாக்கி டாக்கி’களை வாங்க போலீஸ் சூப்பிரண்டு மற்றும் டி.எஸ்.பி. உள்ளிட்ட துறை அதிகாரிகள் செயல்பட்டனர். 
வாக்கி டாக்கி கொள்முதல் செய்வதற்கு ரூ.84 கோடி மதிப்புக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் ‘மோட்டோரலா’ என்ற ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்று உள்ளது. அந்த நிறுவனத்துக்கு வாக்கி டாக்கியை சப்ளை செய்ய டெண்டர் கொடுக்கப்பட்டது. அந்த நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. வாக்கி டாக்கி வாங்க ரூ.47 கோடி நிதி ஒதுக்கியதில் எப்படி ரூ.84 கோடிக்கு வாங்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.

அரசுதுறை கடிதம் மூலம் இந்த தகவல் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த பிரச்சனையை கையில் எடுத்தன. வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கண்டனம் தெரிவித்ததோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின. இது தொடர்பாக கவர்னருக்கும் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் வாக்கி டாக்கி முறைகேடு தொடர்பாக ‘நவீனமாக்குதல்’ பிரிவில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் என்று சோதனை நடத்தினர்.
டெண்டர் விடப்பட்ட 16 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு ஒரே நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை திரட்டவே இந்த சோதனை நடத்தப்படுகிறது.

தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி.அன்புசெழியன், கூடுதல் டி.எஸ்.பி. ரமேஷ், டி.எஸ்.பி. உதயசங்கர் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் 12 குழுக்களாக சென்னை பட்டினப்பாக்கம், கீழப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனையை நடத்தினர். நவீனமாக்குதல் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் எதுவும் உள்ளதா என தேடிவருகிறார்கள்.

ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் முறைகேடு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்