Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆர்எஸ்எஸ் முதுபெரும் தலைவர் பி.பரமேஸ்வரன் காலமானார்

பிப்ரவரி 09, 2020 10:27

கொச்சி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவரும், தீவிர தொண்டரும், பாரதிய ஜன சங்கத்தின் முன்னாள் தலைவருமான பி.பரமேஸ்வரன் காலமானார். அவருக்கு வயது 91.

பாரதிய விசாரா கேந்திரத்தை உருவாக்கி, அதன் இயக்குநராக இருந்தவர் பரமேஸ்வரன். ஜனசங்கம் இருந்த காலத்தில் மூத்த தலைவர்களான தீனதயால் உபாத்யாயா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருடன் இணைந்து பரமேஸ்வரன் பணியாற்றியுள்ளார்.

பரமேஸ்வரனுக்கு கடந்த 2004-ம் ஆண்டு இவரின் சேவையைப் பாராட்டி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பத்ம ஸ்ரீ விருதும், 2018-ம் ஆண்டில் பிரதமர் மோடி, இவருக்கு பத்ம விபூஷன் விருதும் வழங்கி கவுரவித்தனர். கேரளாவில் கடந்த 1927-ம் ஆண்டு, ஆலப்புழா மாவட்டம், சேர்தலா நகரில் பிறந்தவர் பரமேஸ்வரன். திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் வரலாற்று இளங்கலைப் பட்டம் பெற்றார். 

சிறப்பான கல்வியறிவு கொண்டவராக விளங்கிய பரமேஸ்வரன் பல்கலைக்கழக்தில் முதல் மாணவராக வந்து தங்கப் பதக்கம் வென்றார். படிக்கும் காலத்திலேயே இந்து அமைப்புகளிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் ஆர்வமுள்ளவராக இருந்தார். சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும், ஆய்வாளராகவும் இருந்த பரமேஸ்வரன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் மிகுந்த மரியாதைக்குரியவராக நடத்தப்பட்டார்.

பாரதிய ஜனசங்கத்தின் செயலாளராகக் கடந்த 1967 முதல் 1971-ம் ஆண்டு வரையிலும், 1971-77 வரை துணைத் தலைவராகவும், டெல்லியில் உள்ள தீனதயால் ஆய்வு மையத்தின் இயக்குநராக 1977-82 வரையிலும் பரமேஸ்வரன் பணியாற்றினார்
பாரதிய விசாரா கேந்திரத்தின் இயக்குநராகச் செயல்பட்ட பரமேஸ்வரன், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கும் தலைவராக இருந்தவர். 

தலைப்புச்செய்திகள்