Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு விழா: வரும் 23ல் கோலாகலம்

பிப்ரவரி 10, 2020 12:35

கோவை: கோவை செட்டிபாளையத்தில் வரும் 23-02-2020 அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஜல்லிக்கட்டு வாடிவாசல் பூஜையை துவக்கி வைத்து, கால்கோளை நட்டு வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:

தமிழகத்தின் கலாச்சார அடையாளம் என்பதே நமது பழமையான வீர விளையாட்டுகள் ஆகும். ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவானது 200  ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்த தந்தது அதிமுக ஜெ., அரசாகும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக நடைபெறாத ஜல்லிக்கட்டு விழாவானது நமது மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களின் பேராதரவிற்கு மதிப்பளிக்கும் வகையில் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த 28.01.2018 அன்று நடத்தப்பட்டது. தொடர்ந்து 2019ம் ஆண்டிலும் 10.02.2019 அன்று நடைபெற்றது.

தொடர்ந்து நடப்பாண்டும், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு 23.02.2020 அன்று கோவை செட்டிபாளையம் எல்&டி பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு விழாவில் 445 காளைகளும், 323 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். அதுபோலவே கடந்த வருடம், 746 மாடுகளும், 599 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணனயங்கள், மாருதி கார், TVS Exel, மோட்டார் சைக்கிள், சைக்கிள், பீரோ, கட்டில், ரொக்கம் என
பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

கடந்த முறை நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியினை சுமார் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக வந்து கண்டுகளித்தனர். அதுபோலவே, இந்தாண்டும் சுமார் 700 காளைகளும், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கும் வகையிலும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் வந்து கண்டுகளிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவ்விழாவை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்த 2,300க்கும் மேற்பட்ட காவல்துறை அலுவலர்கள், 56 வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 18 குழுக்களும், பொதுசுகாதாரத்துறை மூலம் 12 குழுக்களும் அமைக்கப்பட்டு காளைகள் மாடுபிடி வீரர்களுக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே தகுதியான காளைகள் மற்றும் வீரர்கள் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தகுதியின் அடிப்படையில் விழாவிற்கு பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும். வெயிலில் இருந்து மாடுகளை பாதுகாக்க காத்திருப்போர் கூடத்தில் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. விழா நடைபெறும் மைதானம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பெருமளவில் கண்டுகளிக்க ஏதுவாக போதிய அளவிலான இருக்கை வசதிகளும், விழா நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் தேவையான உணவு, குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட உள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் இந்த முறையும் சிறப்பு வாய்ந்த மாபெரும் விழாவாக ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். எனவே, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் கோயம்புத்தூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவினை நேரடியாக வந்து கண்டுகளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்