Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிர்பாய வழக்கு:குற்றவாளிகளை தூக்கிலிட கீழமை நீதிமன்றத்தை அணுகவும்: உச்சநீதிமன்றம் 

பிப்ரவரி 11, 2020 01:31

புதுடெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட கீழமை நீதிமன்றத்தை அணுகி புதிய தேதியை பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கில் போட அனுமதிக்க முடியாது என்றும், வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்குள் அனைத்து சட்ட நிவாரணங்களையும் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கடந்த 5ம் தேதியின்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக உச்சநீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் கொடுரக் குற்றம் செய்துள்ளனர் என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார். குற்றவாளிகளின் 4 பேரில் 3 பேரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். 3 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதால் அவர்களை தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து வழக்கை 11ம்(இன்று) தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்பயா வழக்கில், நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, சிறை நிர்வாகம் விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் மனு தொடர்பாக நிர்பயா குற்றவாளிகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இவ்வழக்கை 13ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது, குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை வழங்குவதில் விசாரணை நீதிமன்றத்திற்கு தடையாக இருக்காது எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்