Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உமர் சகோதரியின் வழக்கில் நீதிபதி விலகல்

பிப்ரவரி 12, 2020 06:37

புதுடெல்லி: உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி ஒருவர் விலகியதையடுத்து, இந்த வழக்கு நாளை வேறு அமர்வில் விசாரிக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஒரு சிலர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உமர் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், “பாராளுமன்ற உறுப்பினராக நாட்டுக்காக பணியாற்றியவர், மாநில முதல்வராக இருந்தவர், மத்திய மந்திரியாக இருந்தவரால் மாநிலத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடப்படுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி இரவு முதல் உமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 5ம் தேதி பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை காவலில் வைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். அதன்படி சாராவின் மனு இன்று விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், வழக்கை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி எம்.எம்.சந்தானகவுடர் திடீரென விலகினார். இதனையடுத்து சாரா தொடர்ந்த வழக்கு நாளை வேறு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

தலைப்புச்செய்திகள்