Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடிக்கு எஸ்.பி.ஜி., பாதுகாப்பு: ஒரு நாளைக்கு 1.62 கோடி ரூபாய் செலவு!

பிப்ரவரி 13, 2020 06:28

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் எஸ்.பி.ஜி., பாதுகாப்புக்கு ஒரு நாளைக்கு மட்டும் 1.62 கோடி ரூபாய் செலவு ஆவது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டப்படி எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை (கருப்பு பூனைப்படை) இனி பிரதமர் பதவியில் உள்ளவர்களுக்கு (பிரதமர் மோடிக்கு) மட்டும் தான் அளிக்கப்படும். மற்றவர்களுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

2020-21ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், சிறப்பு கமாண்டோக்கள் 3,000 பேர் கொண்ட எஸ்.பி.ஜி.,க்கு செய்யப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. உயரடுக்கு எஸ்.பி.ஜி., படைக்கு 2020-21ம் ஆண்டில் ரூ.592.55 கோடியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளார். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 10 சதவீதம் அதிகம் ஆகும்.

சோனியாகாந்தி குடும்பம் கடந்த ஆண்டு எஸ்.பி.ஜி., சட்டம் திருத்தப்படுவதற்கு முன்னர், நான்கு வி.ஐ.பி.,களின் பாதுகாப்பிற்கு உயரடுக்கு எஸ்.பி.ஜி., பாதுகாப்பு பொறுப்பு வகித்தது. அதாவது பிரதமர் மோடி மட்டுமில்லாமல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குழந்தைகள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா ஆகிய நான்கு பேருக்கு எஸ்.பி.ஜி., பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் 2019-20ம் ஆண்டில் நான்கு விஐபிக்களை பாதுகாக்க எஸ்.பி.ஜி.,க்கு பட்ஜெட்டில் 540.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி ஒரு தனிநபரை பாதுகாக்க ஆகும் செலவு ரூ.135 கோடி. அதாவது பிரதமர் மோடி மற்றும் சோனியா காந்தி உள்ளடக்கிய நான்கு வி.ஐ.பி.,களைப் பாதுகாப்பதற்கான சராசரி செலவு தலா ரூ.135 கோடி. ஆனால். இப்போது ரூ.592.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதமர் மோடிக்கு மட்டுமே எஸ்.பி.ஜி., பாதுகாப்பு என்பதால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 340 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது தினமும் பிரதமர் மோடியின் எஸ்.பி.ஜி., பாதுகாப்புக்கு 1.62 கோடி ரூபாய் செலவு ஆகும். 

தலைப்புச்செய்திகள்