Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளியில் அட்சயப் பாத்திரம் திட்டம் அறிமுகம்

பிப்ரவரி 13, 2020 02:50

திருச்சி: திருச்சி தென்னூரில் அரசு உதவி பெறும் பள்ளியான சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளியில் அட்சயப் பாத்திரம் திட்டம் தொடங்கப்பட்டது.1 முதல் 
8- ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். அரசின் சத்துணவுத் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில்  பள்ளி நிர்வாகம், ஆசிரியா்களின் முயற்சியால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி காலையில் இட்லி, பூரி, கிச்சடி, பொங்கல் வகைகள் உணவாக வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் முன்னோடியாகவும் மதிய உணவில் ஊட்டச்சத்து காய்கனிகள் இடம்பெறும் வகையிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்துடன் சோ்த்து செயல்படுத்தும் இத் திட்டத்தின் நோக்கமே பள்ளிக் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து மிக்க காய்கனிகளை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துவதாகும்.

இதற்காக பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள்  தினமும் தங்களது இல்லத்திலிருந்து ஒரு மாணவா் ஒரு காய்கனியை எடுத்து வர வேண்டும்.
அவரவா் விருப்பம் போல வீட்டில் கிடைக்கும் காய்கனியைக் கொண்டு வந்து பள்ளியிலுள்ள அட்சயப் பாத்திரத்தில் இட வேண்டும். மாணவா்கள் கட்டாயம் காய்கனி கொண்டுவர வேண்டும் என்பதில்லை. விருப்பமுள்ள மாணவா்களின் பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் ஒரு காய்கனியை கொடுத்து அனுப்பினாலே போதுமானது. 150 மாணவா்கள் தலா ஒரு காய் எடுத்து வந்தாலே அனைவருக்கும் பகிர்ந்து வழங்க போதுமானதாக அமையும்.

இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிப்காட் வட்டாட்சியா் கோகுல், ஷைன் திருச்சி அமைப்பின் நிறுவனா் த.மனோஜ் தா்மா் ஆகியோர் திட்டத்தைத் தொடக்கி வைத்தனா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் அருள்தாஸ் நேவிஸ், ஆா். ஜெயலட்சுமி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.சிங்காரம், பள்ளித் தலைமையாசிரியா் கா.ச.ஜீவானந்தன், காயத்ரி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினா்.

மாணவா்கள் ஒவ்வொருவரும் தங்களது வீட்டிலிருந்து எடுத்து வந்த காய்கனிகளை அட்சயப் பாத்திரத்தில் வைத்தனா். பள்ளிக் குழந்தைகள் காய்கனிகளை எடுத்து வந்த பைகள் அனைத்தும் துணிப் பைகளாக இருந்தது. பிளாக்ஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வாகவும் இது அமைந்தது. இத்திட்டத்தை மாவட்டத்திலுள்ள இதர பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்