Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இனி நீட் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை: ஜிப்மர் அறிவிப்பு

பிப்ரவரி 17, 2020 01:03

புதுச்சேரி: வரும் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தனியாகத் தேர்வுகள் நடக்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரிக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தால் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

ஜிப்மரில் மொத்தம் 200 இடங்கள் உள்ளன. அதில் புதுச்சேரிக்கு 150 இடங்களும், காரைக்காலுக்கு 50 இடங்களும் இருக்கின்றன. ஜிப்மருக்குத் தனியாக நுழைவுத் தேர்வை நடத்துவது அரசுக்குக் கூடுதல் செலவை ஏற்படுத்துவதாகவும் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் கருதி வரும் கல்வியாண்டு முதல் ஜிப்மருக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

இச்சூழலில் ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்ட உத்தரவில், ''வரும் கல்வியாண்டில் ஜிப்மர் தனியாக தேர்வெதையும் நடத்தாது. நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கும். மத்திய சுகாதாரத்துறை மூலம் கிடைத்த உத்தரவின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தகவல் பெற www.nta.ac.in, ntaneet.nic.in ஆகிய இணைய முகவரிகளை நாடலாம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்